×

இந்த வார விசேஷங்கள்

குச்சனூர் சனி ஆராதனை
1.6.2024 – சனி

கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில்தான்.
1. சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம்.
2. சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.
3. அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.
4. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.

தேனியில் இருந்து உத்தேசமாக 18 கி.மீ. அடிக்கடி டவுன் பஸ் உள்ளது. கோயில் முன்புறம் பெரியாறு வாய்க்கால் செல்கிறது. தேவைப்படின் நீராடலாம் சனிக் கிழமைகளில் மட்டுமே கூட்டம் அதிகம் இருக்கும். காரில் சென்றால் கோயில் வளாகத்தில் நிறுத்தி கொள்ளலாம். பூஜை செய்ய தேங்காய், பழம், பூ, பத்தி, சூடம், எள் கொண்டு செல்லவும். காக்கை உருவம் கொண்ட குடடி மண் பொம்மை அங்கே கிடைக்கும். அதையும் சேர்த்து பூசைக்குக் கொடுக்கலாம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும், புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். பகவானுக்கு எள்விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

அபரா ஏகாதசி
2.6.2024 – ஞாயிறு

இந்த ஏகாதசி வியாழன், ரோஹிணியில் வருவது சிறப்பு. உபவாசம் என்பதற்கு அன்று முழுவதும் உணவு உண்ணாமல் பட்டினியாய் இருப்பது என்று மட்டும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விதத்தில் அது உண்மைதான். ஆனால், இது புறம் சார்ந்த விஷயம். காரணம், உணவு என்பது உடலுக்கானது. இந்த உடல் ஏகாதசி போன்ற விரதம் இருக்க ஒரு கருவியே தவிர, ஏகாதசி விரதம் இருந்து, அதனுடைய பலனை அடைவது இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய ஆன்மாதான் என்பதை உணர வேண்டும்.உபவாசம் என்பதற்கு இறைவனை நினைத்துக் கொண்டு அவன் அருகில் இருப்பது அல்லது இறைவனுக்கு அருகில் நம்மை கொண்டு போய் சேர்ப்பது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஏகாதசி உபவாசம் என்பது இறைவனிடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய உபவாசம்.அன்றைக்கு உண்ணக்கூடாது. உறங்கக்கூடாது என்று உடலுக்கும் சில விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள். இந்த ஏகாதசியில்தான் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார். அவனுக்குச் சகல நிதி களையும் தந்தார். எனவே இந்த ஏகாதசி உபவாசம் இருப்பவர்களுக்கு, குறைவற்ற செல்வம் நீங்காமல் இருக்கும் என்ற பலசுருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

கழற்சிங்கர் குருபூஜை
4.6.2024 – செவ்வாய்

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் ஒரு குறுநில மன்னர். சிவபக்தர். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானை தரிசனம் செய்ய எண்ணினார். தமது மனைவி, பரிவாரங்களுடனும் திருவாரூரை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த அவர் மனைவி (அரசி) மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவர் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் பட்டத்தரசி மயக்கமுற்று வீழ்ந்தாள். மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அரசியாரின் நிலையைக் கண்டார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத் துணையாரிடம் எமது தேவியார் செய்த பிழையாதோ? என்று விசாரித்த மன்னன் அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்பதை அறிந்து, “நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்க வில்லை” என்று கூறி மலரை எடுத்த அரசியாரின் மலர்க்கையை துண்டிக்க முனைய அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செரு த்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்க, அப்பொழுது மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, உமா மஹே சனாக இறைவன் ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாரின் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. காஞ்சியில் ஏகம்பரேஸ்வரர் கோயிலில் இவருக்குத் தனி சந்நதி உண்டு.

பிரதோஷம்
4.6.2024 – செவ்வாய்

“பிரதோஷ தரிசனம் சர்வ பாவ விமோசனம்” என்பார்கள். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவதரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசியுங்கள். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமை. குருவுக்குரிய விசாகம். மகாசிறப்பு. வளர்பிறை வைகாசி பிரதோஷம் என்பதால் இதனை சுக்லபட்ச மகாபிரதோஷம் என்பார்கள்.மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவவழிபாடு செய்யுங்கள். நமசிவாய என்னும் பஞ்சாட்சரம் சொல்லி ஈசனை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, வில்வ அர்ச்சனை செய்யுங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அறுகம்புல்லும் வழங்குங்கள். நன்மைகள் உங்களைத்தேடி வரும்.

அமாவாசை
6.6.2024 – வியாழன்

இந்த அமாவாசை வைகாசி மாதம் ஏற்படும் அமாவாசை. சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்க அதே ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் உச்சம் பெறும் நிலையில் நிகழும் அமாவாசை என்பதால், இந்த அமாவாசைக்கு சிறப்புண்டு. இந்த அமாவாசை குரு வாராதில் ஏற்படுவது விசேஷம். இறைவன் குருவாக வந்து ரட்சிக்கிறான். பிதுர் வர்க்கங்களைக் காப்பாற்றும் பெருமாளுக்கு (சிராத்த தேவதா சிராத்த சம்ரட்ஷகா) உகந்த நாளில், முன்னோர்களை நினைத்து தர்பணாதிகளை முறையோடு செய்தால், நலம் பெறலாம். எள்ளும் நீரும் இறைத்து வழிபாடு இயற்றுவதோடு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும். மதியம் தலைவாழை இலை போட்டு, உணவுகளையும் படைத்து, நாம் என்ன வேண்டுகின்றோமோ அதை பிதுர் தேவதைகளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் நிகழும் சுபத்தடைகள் விலகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு நீங்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். பிதுர் தேவதையின் அருளும் குலதேவதையின் அருளும் கிடைப்பதோடு பெருமாளின் அருளும் கிடைக்கும் என்பதால் இந்த நாளை தவறவிட வேண்டாம். அன்று மதியம் படைத்துவிட்டு யாராவது ஒருவருக்கு அன்னம் இடுங்கள். காக்கைக்கு உணவிட்டு பிறகு சாப்பிடுங்கள். இன்று உபவாசம் இருந்து முன்னோர்களுக்குப் படைத்துவிட்டு சாப்பிடுவது சிறந்தது.

திருக்கோட்டியூர் நம்பிகள் திருநட்சத்திரம்
6.6.2024 – வியாழன்

ராமானுஜரின் ஐந்து குருமார்களில் ஒருவர்  திருக்கோட்டியூர் நம்பி. வைணவ சமயத்தலைவரான ஆளவந்தார் அவதரித்து பதினோரு வருடங்கள் கழிந்த பின் வைகாசி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் பெரியாழ்வாருக்கு குருவான செல்வநம்பியின் திருவம்சத்தில் அவதரித்தவர்  திருக்கோட்டியூர் நம்பி.  ராமானுஜருக்கு திருமந்திரம் மற்றும் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசித்தார்.கருணைக் கடலான ராமானுஜருக்கு எம்பெருமானார் என்று திருநாமம் சாற்றியாருளியவர்  திருக்கோட்டியூர் நம்பி. அவரது அவதார தினமான இன்று திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்கோட்டியூர் நம்பிக்கு சிறப்பு அபிஷேக, திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் நம்பிகள், மூலவர் பெருமாள் சந்நதியில் மங்களாசாசனம் நடைபெறும். அதன்பிறகு திருக்கோட்டியூர் நம்பிகள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோயில் வளாகத்திற்குள் தென்னை மரத்து வீதி புறப்பாடும் நடக்கும். எல்லா வைணவ கோயில்களிலும், அடியார்கள் இல்லங்களிலும் சிறப்பாக அவதார தினம் அனுஷ்டிக்கப்படும்.

திருநாங்கூர் 9 ரிஷப வாகன புறப்பாடு
6.6.2024 – வியாழன்

ஒவ்வோர் ஆண்டும், வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று 12 சிவாலயங்களில் இறைவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருநாங்கூரில் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது இன்று. சீர்காழிக்கு அருகே அமைந்துள்ள திருத்தலம் திருநாங்கூர். இந்த ஊரைச் சுற்றிலும் பல்வேறு வைணவ திவ்ய தேசங்களும் சிவத்தலங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள், சுற்றியிருக்கும் 11 திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள் கருட சேவையில் எழுந்தருளும் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று, ஒவ்வோர் ஆண்டும், வைகாசி மாத, ரோகிணி நட்சத்திரத்தன்று 12 சிவாலயங்களில் இருந்து இறைவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் 12 ரிஷப வாகன சேவை காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான ரிஷப வாகன சேவை, இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. திருநாங்கூர் அன்னை அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு மதங்கீஸ்வர சுவாமி திருக்கோயில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி அன்னை அகிலாண்டநாயகி உடனுறை அருள்மிகு ஆரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில், கீழ் சட்டநாதபுரம் திருயோகீஸ்வரம் அன்னை யோகாம்பாள் உடனுறை அருள்மிகு யோகநாத சுவாமி திருக்கோயில், உள்ளிட்ட 12 கோயில்களில் இருந்து இறைவன் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, இன்று இரவு ஒரே இடத்தில் அருள் பாலிப்பர். இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தையும் ரிஷப வாகனக் காட்சியையும் கண்டு வழிபட, சகல செல்வங்களும் கூடும் என்பது ஐதீகம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Kuchanur ,Shani Bhagavan ,Thirunallar ,Tamilnadu ,Saniswaran ,Kuchanur, ,Theni district ,Swayambu ,
× RELATED கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு