×
Saravana Stores

பாசன வாய்க்கால் சீரமைக்க எதிர்பார்ப்பு: நொய்யல் நீராதார விவசாயிகள் காத்திருப்பு

கோவை, மே 16: கோவை நொய்யல் ஆறு 80.50 கி.மீ தூரம் அமைந்துள்ளது. 28 குளங்கள், 23 அணைக்கட்டு, 2 நீர் தேக்கம், 18,386 ஏக்கர் பாசன பரப்புக்கு நேரடி நீர் சப்ளை மற்றும் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மறைமுக பாசன உதவிக்கு இந்த ஆறு உதவியாக இருக்கிறது. நகரில் உள்ள 8 குளங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 29-12-2009ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டிற்கு முன் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட எல்லைக்குள் உள்ள நொய்யல் நீராதார குளங்கள், அணைக்கட்டுகள், பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு பணி நடந்தது. 230 கோடி ரூபாய் செலவில் நடந்த பணிகள் முழுவதும் முடிவடைந்தது. ஆனால் பாசன வாய்க்கால் மூலமாக விவசாயிகளின் விளை நிலங்களுக்கு நீர் கிடைக்காத நிலை இருக்கிறது. நீலி, புதுக்காடு, சித்திரை சாவடி, குனியமுத்தூர், கோவை, குறிச்சி, வெள்ளலூர், சிங்காநல்லூர், ஓட்டர்பாளையம், இருகூர், சூலூர், ராசிபாளையம், மாதப்பூர், சாமளாபுரம், கருமத்தம்பட்டி, பள்ளபாளையம், செம்மாண்டம்பாளையம், மங்கலம், ஆண்டிப்பாளையம், மண்ணரை பாசன வாய்க்கால் 94 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ளது.

இந்த பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக நடத்தாமல் சில பகுதிகளை விட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களிலும், ஆற்றில் நீர் வரும் காலங்களிலும் பாசன வாய்க்காலில் முறையாக நீர் திறப்பதில்லை. விளைநிலங்களுக்கு நீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் நொய்யல் ஆற்றில் யாருக்கும் சாக்கடையுடன் கலந்து வீணாகி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், ‘‘பாசன வாய்க்கால்களை சீரமைத்து முழு அளவில் நீர் திறக்க, கடை மடை நீர் பாய வழிவகை செய்ய வேண்டும். கடந்த காலத்தில் செய்த பணிகள் குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. எவ்வளவு கிமீ தூரத்திற்கு பாசன வாய்க்கால் சீரமைக்கப்பட்டது என தெரிவிக்கவில்லை. பாசன வாய்க்கால்களை முறையாக சீரமைத்தால் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கும். சித்திரை சாவடி, மத்வராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் சேதமாகியிருக்கிறது.

ஆற்றின் துவக்க பகுதியில் இந்த அவலமான நிலை என்றால் கடைசி பகுதிகளில் உள்ள ஆற்றின் பாசன வாய்க்கால்கள் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாக இருக்கிறது. விவசாயிகளின் ஆதார தேவையான ஆற்று நீரை விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post பாசன வாய்க்கால் சீரமைக்க எதிர்பார்ப்பு: நொய்யல் நீராதார விவசாயிகள் காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Noyal ,Coimbatore ,Coimbatore Noyal River ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...