சூலூர், மே 15: கண்ணம்பாளையத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதியின்றி தனியார் அறக்கட்டளையினர் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூல் செய்து வருவதாக கோயில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலின் கோபுர பணிகளை மராமத்து வேலை செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கோயிலை புனரமைப்பது தொடர்பாக தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள், குழு அமைத்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு ஊர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பெயரோ, அரசு அதிகாரிகள் பெயரோ எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் கோயிலுக்கு நன்கொடை வழங்க வேண்டும் எனக் கூறி தனியார் அறக்கட்டளையில் கியூஆர் கோடை அச்சிட்டு அழைப்பிதழ்களை விநியோகித்து வருவதாக தெரிகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த வேணுகோபாலசாமி கோயில் நிர்வாக செயல் அலுவலர் பேபி ஷாலினி, நேற்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வேணுகோபாலசாமி கோயில் நேரடி அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயிலாகும். இக்கோயில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் செயல் அலுவலரால் நிர்வாகிக்கப்பட்டு வருவதாகவும் கோயிலின் கருவறை, விமானம், மராமத்து பணிகள் செய்து வர்ணம் பூசுவதற்காக துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வேணுகோபாலசாமி கோயில் திருப்பணி என்று தனியார் அறக்கட்டளை குழுவினர் துறையின் அனுமதி இன்றி கோயிலில் திருப்பணிகள் செய்தும் தற்போது குட முழுக்கிற்கான தேதியை நிர்ணயம் செய்தும் உள்ளனர். கோயில் குட முழுக்கிற்கான அழைப்பிதழை தனது அனுமதி இன்றி சட்ட விரோதமாக நன்கொடை செலுத்த தனியாக கியூஆர் கோட் ஒன்றினை அருள்மிகு பழனியாண்டவர் டிரஸ்ட் என்ற வங்கிக்கணக்கில் செலுத்தக்கோரி அச்சடித்துள்ளனர்.
கோயிலின் வருவாயை முற்றிலும் தடுத்தும், அதனை அபகரிக்கும் நோக்கத்துடனும் அழைப்பிதழை அச்சிட்டு ஊர் முழுவதும் பொதுமக்களிடம் வழங்கி வசூல் செய்து வருகின்றனர். எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயிலில் வசூல் செய்யும் தனி நபர்கள் மற்றும் வேணுகோபாலசாமி கோயில் திருப்பணிக் குழுவினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தனியார் அறக்கட்டளையினர் கியூஆர் கோடு மூலம் பணம் வசூல் appeared first on Dinakaran.