×

மும்பையில் வாக்குச் சாவடி முகவர்களுக்கு பிரசார அறிக்கையுடன் பையில் தங்க பிஸ்கட் அனுப்பும் பாஜ: வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: மும்பை காட்கோபரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ முகவர்களுக்கு, பிரசார அறிக்கையுடன் பையில் தலா ஒரு தங்க பிஸ்கட் அனுப்பப்படுவதாக மகாராஷ்டிர காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மகாராஷ்டிராவில் புனே உட்பட 11 தொகுதிகளில் 4ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 13ம் தேதியன்றும், மும்பை, தானே உட்பட 13 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 20ம் தேதியன்றும் நடக்க இருக்கிறது. அதன்படி மும்பை வடகிழக்கு தொகுதியில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜ கட்சி சார்பில் மிகிர் கோடேசாவும், எதிர்க்கட்சி கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடியில் அங்கம் வகிக்கும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் சஞ்சய் தீனா பாட்டீலும் போட்டியிடுகின்றனர். மேலும் சில கட்சிகள் போட்டியிடும் போதிலும், பாஜ- உத்தவ் கட்சியிடையேதான் கடும் போட்டி நிலவுவதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், காட்கோபர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு பிரசார அறிக்கையுடன் பையில் தலா ஒரு தங்க பிஸ்கட்டும் சேர்த்து அனுப்பப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார், பாஜ முகவர்களிடம் இருந்து தேர்தல் பிரசார அறிக்கைகளுடன் தலா ஒரு தங்க பிஸ்கட் அடங்கிய பையை பறிமுதல் செய்கின்றனர்.

பின்னர், அதைக் குறித்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுபற்றிய டிவிட்டர் பதிவில், அதானியின் டெம்போ தற்போது மும்பையை அடைந்துவிட்டது. தேர்தலுக்கு பாஜ எவ்வளவு பணத்தை பயன்படுத்துகிறது என்பதை இந்த வீடியோ நிரூபணம் செய்துள்ளது. இந்த வீடியோவில், மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள பாஜ கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தலா ஒரு தங்க பிஸ்கட்டுடன், பிரசார அறிக்கைகள் வழங்கப்பட்டதை கண்டுபிடித்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர் விசாரிக்கின்றனர். பாஜவின் இந்த செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?, என காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.

The post மும்பையில் வாக்குச் சாவடி முகவர்களுக்கு பிரசார அறிக்கையுடன் பையில் தங்க பிஸ்கட் அனுப்பும் பாஜ: வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Mumbai ,Maharashtra Congress ,Ghatkopar, Mumbai ,Pune ,Maharashtra ,
× RELATED இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை...