×

அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏமாற்றம்

புதுச்சேரி, ஜூலை 25: அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அழைத்து பேசுவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் பாஜ-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமையில் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, முதல்வரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து புகார் கூறினர்.

மேலும் பாஜ எம்எல்ஏக்களை மதிக்கவில்லை. இதனால் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து தருவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சமாதானப்படுத்த முயன்றும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நடந்த செயற்குழு கூட்டத்தில், அதிருப்தியை வெளிப்படுத்தாமல் அமைதி காத்ததால் பாஜக எம்எல்ஏக்கள் சமரசம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாஜ அமைச்சர்களை மாற்ற வேண்டும், வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என்பதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் உறுதியாகவுள்ளனர்.

இந்த விவகாரத்தில் அமித்ஷா, தங்களுக்கு சாதகமாக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமையில் ஜான்குமார், ரிச்சர்ட்ஜான்குமார், பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார். தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கவனம் செலுத்துவதாகவும், பின்னர் இது தொடர்பாக அழைத்து பேசுவதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எம்எல்ஏக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் திட்டமிட்டபடி அமித்ஷாவை சந்தித்து பேசுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அமித்ஷாவை சந்திக்க முடியாத நிலையில் இன்று புதுச்சேரி திரும்பவுள்ளனர். நேரம் கிடைக்கும்போது மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.

The post அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Amit Shah ,Puducherry ,BJP-NR Congress ,
× RELATED சிறப்பு அந்தஸ்து ஒரு வரலாறு ஆகி...