கோவை, மே 10: வேலை செய்யும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைச்சட்டம் 2013ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அனைத்து அரசுதுறைகள், தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் உள்புகார் குழு தலைவராக பெண் அலுவலர் நியமிக்க வேண்டும். இரண்டு நபர்களை உறுப்பினராகவும், இத்துறையில் நன்கு பழக்கமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் எனவும், விசாரணைக்கான வழிமுறைகளை குறித்தும் இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு அரசுத்துறைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசுபயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,
சிறு குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 10 நபர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர், கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். உள் புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-ன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உள்புகார் குழு அமைத்த நிறுவனங்கள் மாதம்தோறும் பெறப்பட்ட புகார்கள் குறித்த அறிக்கையினை மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆண்டு அறிக்கையினை ஒவ்வொரு வருடமும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டாயம் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
The post பணியிடங்களில் பெண்கள் பாலியல் வன்முறை தடுக்க உள்புகார் குழு அமைக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.