ஈரோடு, மே 7: டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழ் இன்பன் தலைமையில், மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் இருந்து பி.பெ.அக்ரஹாரம் செல்லும் சாலையில் 1,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் மற்றும் பிற சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகளும் உள்ளன.
இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண்: 3527 உள்ளது. இங்கு மது அருந்துவோர், சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து, மது குடித்துவிட்டு போதையில் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர். தகராறு செய்வதுடன், மது பாட்டில்களை உடைத்து வீசி, பொதுமக்களின் நடமாட்டத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதாலும், போதையில் செல்வதாலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
அது மட்டுமின்றி இந்த டாஸ்மாக் கடையிலும், அதன் அருகிலும், சமீபத்தில் கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால், பகலில் கூட பெண்கள் இந்தச் சாலையில் நடக்கவே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். மேலும், அந்த பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு appeared first on Dinakaran.