கோவை, மே.7: கோவை மத்திய சிறையில் தற்போது சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2023-2024 கல்வியாண்டில் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறை கைதிகளின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய அனைத்து சிறை கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் தண்டனை சிறைவாசி சுப்புராஜ் என்பவர் 600க்கு 464 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மன்சூர் அகமது என்பவர் 600 க்கு 457 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மோகன்ராஜ் என்பவர் 600க்கு 447 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைத்து சிறை கைதிகளையும் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இனிப்புகள் வழங்கி, கல்வியின் சிறப்பு மற்றும் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து தேர்ச்சி பெற்று சிறைவாசிகளுக்கு வாழ்த்துகளையும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
The post கோவை சிறை கைதிகள் 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.