×
Saravana Stores

போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா, பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆவடி வழியாக சென்னைக்கு கடத்தப்பட்டு வந்தன. இதனால், மாநில எல்லைகளில் போலீசார் கஞ்சா நடமாட்டத்தை வெகுவாக குறைத்து விட்டனர். ஆனால் ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கஞ்சா விற்பனை குறித்து உள்ளூர் போலீசுக்கு பல முறை தகவல் தெரிவித்தும், அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீஞ்சூர் பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களிலேயே விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களால் அடிக்கடி விபத்துகள், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடி, தடி தகராறுகள் அதிக அளவில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய மீஞ்சூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கண்டும் காணாததுபோல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘மீஞ்சூரில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் காளிராஜ். சப்-இன்ஸ்பெக்டராக சாந்தி உள்ளார். இவர்கள் ரோந்து செல்வது இல்லை. வாகனச் சோதனை நடத்துவதில்லை. மீஞ்சூர் போலீசில் எந்தப் புகார் வந்தாலும், இரு தரப்பையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி விடுகின்றனர். இரு தரப்பினரும் மீஞ்சூர் காவல்நிலைய அதிகாரிகளை கவனித்து விடுகின்றனர். இதனால், பஞ்சாயத்து பேசி முடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், கஞ்சா மற்றும் போதைப் பொருள் குறித்து புகார் செய்ய பயமாக உள்ளது. பல இடங்களில் போலீசுக்கு தகவல் தெரிவித்த பலர் கொல்லப்படுகின்றனர். இதனால் மீஞ்சூரிலும் அதுபோன்று நடக்கக் கூடாது என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறோம். போலீஸ் உயர் அதிகாரிகள், மீஞ்சூரில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Chennai ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,Tiruvallur ,Meenjur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில்...