×

111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, நவ.10: சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய கட்டமாகவும் ரிப்பன் மாளிகை விளங்கி வருகிறது. 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி செயல்பட தொடங்கியது. மாநகராட்சிக்கான தனி கட்டிடத்திற்கு 1909ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மின்டோ பிரபு, ரிப்பன் மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கான பணிகள் முடிந்து, கடந்த 1913ம் ஆண்டு ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் முன்னெடுத்த கட்டிட கலையான இந்தோ-சராசனிக் பாணியில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.

இந்த மாளிகையை லோகநாத முதலியார் என்பவர் ₹7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டிக் கொடுத்தார். இதில், ₹5.5 லட்சம் அவருக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரிப்பன் மாளிகை செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது. இந்த கட்டிடத்தின் முதல் 3 தளங்களும் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 8.2 அடியாகும். ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஏராளமான சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை நமக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல் சார்ந்த பணிகளும் இந்த ரிப்பன் மாளிகையில்தான் நடைபெறும். இந்நிலையில், இந்த பழமை வாய்ந்த சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிப்பன் மாளிகையைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது கவ்லி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மூலம் commcellgcc@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 94451 90856 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரிப்பன் மாளிகையை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்களுக்கு, அதன் உள்ளே சென்று காண வேண்டும் என்ற நெடுநாள் எண்ணம் இதன்மூலம் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரிப்பன் மாளிகையை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்களுக்கு, அதன் உள்ளே சென்று காண வேண்டும் என்ற நெடுநாள் எண்ணம் இதன்மூலம் நிறைவேறும்.

The post 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ribbon House ,Chennai ,Complex ,
× RELATED டிஜிட்டல் பலகைகளாகும் சாலை பெயர்கள்.....