×

காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் – வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

 

தாம்பரம், நவ.8: காஸ் பைப் லைன் அமைக்கும் பணியால் சேலையூர் – வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே கேம்ப் ரோட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பகுதியில், காஸ் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தொடங்கியது.

நேற்று அதிகாலையில் முடிய வேண்டிய நிலையில் பணிகள் முடிக்கப்படாமல் 200 மீட்டர் நீளத்திற்கு காஸ் பைப் சாலையிலேயே போட்டு வைக்கப்பட்டிருந்தது. இதனால் சேலையூர் காவல் நிலையத்தில் இருந்து எதிரில் உள்ள ரங்கா தெரு வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் கேம்ப் ரோடு சந்திப்பு வரை சென்று சேலையூருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் அகரம், திருவஞ்சேரி, சேலையூர் பகுதியில் இருந்து இந்திரா நகர் வழியாக வேளச்சேரி சாலை வரும் வாகனங்கள் வர முடியாமல் கேம்ப் ரோடு சந்திப்புக்கு வந்ததால் வேளச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ, மாணவிகளும், அலுவலகத்திற்குச் சென்றவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பைப்லைன் அமைக்கும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டதால் இரவில் பணிகளை முடிக்க முடியாததால் காலை நேரத்திலும் பணிகள் தொடர்ந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் நேற்று காலை முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் – வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Selaiyur ,Velachery ,Thambaram ,Selaiyur- ,Velacherry ,Chelaiyur police ,Camp Road ,Thambaram… ,Chelaiyur ,Dinakaran ,
× RELATED தாம்பரம் சேலையூர் அருகே...