மண்டி: பெயர் குழப்பத்தால் எதிர்க்கட்சியை தாக்குவதற்கு பதிலாக, கூட்டணி கட்சியின் வேட்பாளரை தாக்கிய கங்கனா விவகாரம் இணையத்தில் விவாத பொருளாகியுள்ளது. இமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா, சமீபத்தில் நடந்த பிரசாரத்தின் போது அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை வாரிசு அரசியலில் வந்தவர்கள் என விமர்சித்தார். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். தற்போது தேர்தல் பிரசாரத்தின்போது கங்கனா பேசுகையில், ‘குட்டிச்சுவரான இளவரசர்களின் கட்சி ஒன்று உள்ளது. அக்கட்சியில் உள்ள ராகுல் காந்தி, நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய நினைப்பவர்.
அதேபோல் தேஜஸ்வி சூர்யா போக்கிரித்தனம் செய்துகொண்டு மீன் சாப்பிடுபவர்’ என்று பேசினார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயருக்குப் பதிலாக, பெங்களூரு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் பெயரை மாற்றி கங்கனா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அந்த வீடியோவை பகிர்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், ‘யார் இந்த பெண்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
The post தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல் appeared first on Dinakaran.