×

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் கடந்த 6ம் தேதி வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவு திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே கடந்த நவ.23ம் தேதி ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

தற்போது தொழிலாளர் வரவு செலவு திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ரூ.1,056 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமான அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமராகிய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தமிழ்நாட்டில் 2024-25ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவு திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதை போன்று ஒப்புதல் அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 100 நாள் வேலைத்திட்டத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : CM M.K. Stalin ,Chennai ,Modi ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு இந்தியனையும் நான் எனது சொந்தமாகவே கருதுகிறேன் : பிரதமர் மோடி