×

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்காது என்பதால் அதிமுக-பாஜ புறக்கணித்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் அதிமுக – பாஜ புறக்கணித்துள்ளது, என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு சொந்தமான இடத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு சந்தை 3வது ஆண்டாக செயல்பட்டு வருகிறது. வியாபாரிகளுக்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 600 வாகனங்கள் வெளிமாவட்டங்கள், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மஞ்சள், இஞ்சி, கரும்பு தோரண குருத்துப் போன்றவைகள் கொண்டுவரப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தாண்டும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு போலவே கரும்பு வண்டிகளுக்கு ரூ.1500 வாடகை என்றும் கரும்பில்லாத மஞ்சள், இஞ்சி பொருட்களை கொண்டுவரும் வாகனங்களுக்கு ரூ. 1000 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதற்கும் மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் உள்ளனர். கூடுதல் போக்குவரத்து காவலர்களைக் கொண்டு போக்குவரத்து சீர்செய்யப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்து டெபாசிட் கூட கிடைக்காது என்பதற்காகத்தான் அதிமுக, பாஜ போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வைத்து தற்போது ஓட்டம் பிடிக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நிச்சயமாக உதய சூரியன் உதிக்கும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர், செயலாளர் அன்சுல் மிஸ்ரா, பிரபாகராஜா எம்எல்ஏ, கவுன்சிலர் லோகு, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, சி.எம்.டி.ஏ செயற்பொறியாளர் ராஜன்பாபு உள்பட பலர் இருந்தனர்.

The post ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்காது என்பதால் அதிமுக-பாஜ புறக்கணித்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK- ,BJP ,Erode ,Minister ,Sekarbabu ,Chennai ,AIADMK ,P.K. Sekarbabu ,Minister of Charities and ,Chennai Metropolitan Development Corporation ,Pongal ,Koyambedu ,Dinakaran ,
× RELATED செல்வப்பெருந்தகைக்கு பாஜ எச்சரிக்கை