ராயக்கோட்டை, மே 5: ராயக்கோட்டை பகுதியில், பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பால் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் விவசாயிகள் அதிக அளவில் பச்சை மிளகாயை சாகுபடி செய்துள்ளனர். தற்போது சாகுபடி செய்த இடங்களில் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. நாற்று நட்ட 90 நாட்களில் மிளகாய் அறுவடைக்கு வரும் நிலையில், தொடர்ந்து 3 மாதங்கள் அறுவடை செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். பச்சை மிளகாய் வாரம் 2 முறை அறுவடை செய்வது போக, செடிகளிலேயே பழுக்க வைத்து காய்ந்த பிறகு, வத்தல் மிளகாயாகவும் அறுவடை செய்கின்றனர். பச்சை மிளகாய் நல்ல விலைக்கு விற்பதால், கிலோ ₹75க்கு மொத்த கொள்முதலாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் விளைச்சலாகும் பச்சை மிளகாய், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். விலை கூடுதலாக கிடைப்பதால், 10க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை வைத்து பறிக்கின்றனர். அவர்களுக்கு காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை கூலியாக ஒருவருக்கு ₹400 வழங்குகின்றனர். இதனால், மலர் சாகுபடிக்கு அடுத்த படியாக, பச்சைமிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு appeared first on Dinakaran.