×

விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

ஆத்தூர், மே 5: ஆத்தூர் அருகே விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 60 பவுன் நகை கொள்ளை போனதாக முதலில் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (எ) பால்காரர் (55), விவசாயி. இவரது மனைவி கவிதா (50). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, வெளியில் போர்ட்டிகோ பகுதியில் 2 கயிற்றுக்கட்டிலை போட்டு படுத்து தூங்கியுள்ளனர். வீட்டின் சாவியை தான் படுத்திருந்த கட்டில் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு பழனிவேல் தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பழனிவேல் கண்விழித்துள்ளார். அப்போது எழுந்து, வீட்டை திறந்துள்ளார்.

உள்ளே பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்களிடம் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை, ₹2.65 லட்சம் பணம், வெளியில் தலைக்கு அருகில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக பழனிவேல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை போலீசார் வரவழைத்தனர். அவர்கள், கொள்ளையர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சோதனையும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் வீட்டினுள், கொள்ளை போனதாக கூறப்பட்ட 60 பவுன் நகை, ₹2.65 லட்சம் பணம் இருந்ததை பழனிவேல் பார்த்துள்ளார். உடனே தனது செல்போன்களை மட்டும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து தலைவாசல் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருடப்பட்ட 2 போன்களும் சேலம் மாநகரில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார், சேலத்திற்கு வந்து அதனை வைத்திருந்த அம்மாபேட்டையை சேர்ந்த யுவனேஷ் (21), நாமக்கல் வீனஸ்காலனியை சேர்ந்த தனுஷ்கரன் (21) ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களும் மீட்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் நடந்த விசாரணையில், அந்த 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மணிவிழுந்தான் பகுதிக்கு வந்து பழனிவேல் வீட்டில் செல்போன்களை திருடியதோடு, சார்வாய்புதூர் பகுதியில் சிலம்பரசன் (24) என்பவருக்கு சொந்தமான பைக்கை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

அந்த பைக்கையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து பழனிவேல் மற்றும் சிலம்பரசன் புகார்களின் பேரில், கைதான யுவனேஷ், தனுஷ்கரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post விவசாயி வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,Athur Manivilundhan ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...