×

குஜராத் சூரத் தொகுதியில் டிஸ்மிஸ்; இந்தூர் தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் காங். வேட்பாளர்: பாஜவில் சேருகிறார்

இந்தூர்: குஜராத் மாநிலம் சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதே போல் ஒரு சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள இந்தூர் மக்களவை தொகுதியில் தற்போதைய பாஜ எம்பியான சங்கர் லால்வானிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அக்‌ஷய் காந்தி பாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். பின்னர் அமைச்சர் கைலாஸ் விஜய்வர்கியாவுடன் காரில் சென்றார். எனவே அக்‌ஷய் பாஜவில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அமைச்சர் கைலாஸ் விஜய்வர்கியா தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தியை பிரதமர் மோடி தலைமையில் பாஜவிற்கு வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ‘‘ஒருவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்று பாஜவில் சென்று இணைவது என்பது இயற்கையானது , வழக்கமானது அல்லது சாதாரணமானது இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்று கூறினோம். இது தான் அச்சுறுத்தல் இது குறித்து தான் பேசினோம். வேட்பாளர்களை மயக்குவது, வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு அழுத்தம் கொடுப்பது, அவர்களை மிரட்டுவது, அவர்களுக்கு முன்மொழிபவர்களை மிரட்டுவது இது தான் நடக்கிறது. மக்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் வகையிலான மிரட்டல்கள் இருக்கும்போது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் எப்படி நடைபெறும். பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசுகிறார். ஆனால் அதற்கு அவர் பொறுப்பேற்காமல் அது குறித்த நோட்டீஸ் கட்சி தலைவருக்கு செல்கிறது. இதுபோன்ற சூழலில் சுதந்திரமான நியாயமான தேர்தல் எப்படி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

The post குஜராத் சூரத் தொகுதியில் டிஸ்மிஸ்; இந்தூர் தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் காங். வேட்பாளர்: பாஜவில் சேருகிறார் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Congress ,Indore ,BJP ,Mukesh Dalal ,Nilesh Kumbani ,Surat ,Madhya Pradesh ,Lok Sabha Constituency ,Gujarat Surat ,Dinakaran ,
× RELATED வீட்டுக்கு வந்த பார்சலில் பயங்கரம்...