×

அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஒன்றிய பாஜ ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள் தான் ஏப்ரல் 19. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது.

இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துwவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள். அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று திமுகவினரை உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன்.

இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும். தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம். ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

The post அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஒன்றிய பாஜ ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Chief Minister ,M.K.Stal ,M. K. Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,India ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...