கிருஷ்ணகிரி, ஏப்.16: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பர்கூர் கன்கார்டியா பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஓசூர் காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி நடந்தது.
இதை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 16 லட்சத்து 23 ஆயிரத்து 179 வாக்காளர்களும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கை பதிவு செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 14,440 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், வாக்கு சாவடிகளுக்கு நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், விருப்பத்தின் பேரில் தபால் வாக்குகள் செலுத்தலாம் என படிவம் 12டி வழங்கப்பட்டது. அவற்றில் 640 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து படிவங்கள் பெற்றனர். மீதமுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் போது சக்கர நாற்காலி, சாய்வு தள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பர்கூர் கன்கார்டியா பார்வையற்றோர் பள்ளியை சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள், 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, தேர்தல் விழிப்புணர்வு பாடல்களை பாடினர். மேலும், பார்வையற்றோருக்காக வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் ஆகியவை பிரெய்லி முறையில் அச்சடிக்கப்பட்ட மாதிரி பேலட் தாள் மூலம் வாசித்து காட்டினர். காது கேளாதோருக்கு ஆம்பூர் ஐ.ஈ.எல்.சி காதுகேளாதோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, சைகை மொழியில் செய்து காட்டியுள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தவறாமல் வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி தங்கதுரை, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், காது கேளாதோர், பார்வையற்றோர் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் appeared first on Dinakaran.