×

நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் அன்புமணி ஒரே போடு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிச்சாமி பாமகவை விமர்சிக்க தகுதியே கிடையாது. நாங்கள் மட்டும் 2019 பொதுத்தேர்தலில் கூட்டணியில் இல்லை என்றால், அப்போதே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். அதிமுகவை பொறுத்த வரையில் கூட்டணியில் இருந்தால் தியாகி… இல்லை என்றால் துரோகியா? அதிமுக நம்மை ஏமாற்றி விட்டார்கள். இட ஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்லி சொல்லியே நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள்.

அதிமுகவுடன் கூட்டணியில் சேர்ந்த போது 10 கோரிக்கைகளுடன் தான் சேர்ந்தோம். அதில் முதல் கோரிக்கை இட ஒதுக்கீடு. இரண்டாவது கோரிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல். 2019 முதல் 2 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போது வன்னியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கல. இறுதியாக இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே உங்களுடன் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று பாமக நிறுவனர் கூறினார்.

கடைசி நாள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருந்த நேரத்தில் மதியம் 12 மணிக்கு ஜி.கே.மணியிடம் லிஸ்ட் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக மதியம் 1 மணிக்கு சட்டத்தை கொண்டு வருகின்றனர். கடைசி நாளில் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது எனக் கூறியும், அரைகுறையாக உள்ளது எனவும் நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. இது அதிமுக திட்டமிட்டு தான் செய்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பெரிய தியாகி போல் இதனை நான் தான் கொடுத்தேன் என்று கூறிக் கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

நாங்கள் போட்ட பிச்சைதான் அன்புமணிக்கு எம்பி பதவி எடப்பாடி பதிலடி
விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வாரி வழங்கும் 2வது மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு திருப்பி அளிக்கும் நிதி குறைவுதான். ஆனால் நமக்கு ஜிஎஸ்டி வருவாய் கிடையாது. மாநிலங்களுக்கு மாநிலம் பாரபட்சம் காட்டுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

அன்புமணி ராமதாஸ் அய்யய்யோ பிச்சை போடுங்கள் என்று கூறுவார். அப்படி நாங்கள் போட்ட பிச்சைதான் எம்பி பதவி. அதிமுக ஆட்சியில் தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. ஆனால் பாஜக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது என்று அறிவித்துள்ளனர். கூட்டணியில் உள்ள பாமக கொள்கை என்ன?. ஆனால் அவர்கள் அதிமுகவை விமர்சிக்கிறார்கள். பிரதமர் மோடி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாமகவின் நிலை என்ன?. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வார்கள். சில பேர், சில காலத்தில் தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த தேர்தலில் விடிவுகாலம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் அன்புமணி ஒரே போடு appeared first on Dinakaran.

Tags : Anbumani ,AIADMK government ,BAMA ,Anbumani Ramadoss ,Murali Shankar ,Villupuram ,Lok Sabha ,Vikravandi ,Villupuram district ,Edappadi Palanichamy ,Bamagawa ,AIADMK ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...