கோவை, ஏப். 10: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1,018 வாக்குச்சாவடி மையங்களில், 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில், 347 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர். இவர்கள் தேர்தலுக்கு முந்தைய நாளான வரும் 18ம் தேதியை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்நிலையில், இப்பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையிலும், ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
வனப்பகுதியை ஓட்டிய வாக்குச்சாவடி மையங்களில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளின் போது பணியில் ஈடுபட உள்ளதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா appeared first on Dinakaran.