×

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

 

சேலம், ஏப்.6: சேலம் மாவட்டத்தில் படிவம் 12டி வழங்கிய 9,402 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் குழுக்கள் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர். தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில், வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே படிவம் 12டி வழங்கப்பட்டு, தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. தொடர்ந்து அவர்களின் தபால் வாக்குகளை பெறும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24ம் தேதி வரை வயது மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான படிவம் 12டி பெறப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட 5,711 மூத்த வாக்காளர்களும், 3,691 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என மொத்தம் 9,402 வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இவர்களில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 5,180 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. சேலம் சின்ன திருப்பதி கலைவாணி நகர் பகுதியில் தபால் வாக்கு பெறும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடு, வீடாக சென்று தபால் வாக்குகளை பெறும் நடைமுறைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஆர்டிஓ அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் இந்த தபால் வாக்குகளை பெற அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏற்கனவே படிவம் 12டி வழங்கியவர்களின் வீடுகளுக்கு ெசன்று தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இப்பணிகளை வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Tamil ,Nadu Parliamentary ,Elections ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...