×
Saravana Stores

வங்கதேசத்துடன் மகளிர் டி20 ஆஸ்திரேலியா அபார வெற்றி: ஹீலி – மூனி அமர்க்களம்

மிர்பூர்: வங்கதேச மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. திலாரா அக்தர், சோபனா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில், முர்ஷிதா கதுன் 20, பாத்திமா கதுன் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் நிகர் சுல்தானா 63 ரன் (64 பந்து, 7 பவுண்டரி), ஷோர்னா அக்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 13 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 127 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனைகள் கேப்டன் அலிஸா ஹீலி 65 ரன் (42 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), பெத் மூனி 55 ரன்னுடன் (36 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அலிஸா ஹீலி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூரில் நாளை நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் மகளிர் டி20 ஆஸ்திரேலியா அபார வெற்றி: ஹீலி – மூனி அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Australia Women's T20 ,Bangladesh ,Healy ,Mooney ,Mirpur ,Australia ,T20 ,Bangladesh Women ,Mirpur National Stadium ,
× RELATED வங்கதேச ஒருநாள் அணி கேப்டனாக நீடிக்கிறார் ஷான்டோ