×
Saravana Stores

புதிய தொழிற்பேட்டையால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சோமனூர்,மார்ச்7:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்துள்ள கிட்டாம்பாளையத்தில் அமைக்கப்பட்டு வரும் அறிஞர் அண்ணா தொழிற்பேட்டையை தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் புதிதாக அமைய உள்ள தொழிற்பேட்டையில் மேற்கொள்ள உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்தும் திட்ட அமைவுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோவை புறநகரான கிட்டாம்பாளையத்தில் சிறு குறு தொழில்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். கிட்டாம்பாளையத்தில் 316 ஏக்கரில் கடந்த கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமானது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும். இங்கிருந்த சிறு,குறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் இத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு ஆணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 24கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.

இந்த தொழிற்பேட்டையில் உள்ள 585 மனைகளிலும் 26 சிறு பாலங்கள் 1.9கி.மீ தடுப்புகள் அமைத்து சாலைகள் தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு எல்லா பணிகளையும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினை அழைத்து தொழிற்பேட்டையை திறக்க திட்டமிட்டுள்ளோம். திட்டம் செயல் வடிவத்திற்கு வந்த பிறகு 10,000 பேருக்கு நேரடியாகவும் 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். சிறு குறு தொழில் முனைவோருக்கு தொழில் செய்வதற்கான கடன் வழங்க சிறப்பு ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது அரசு செயலர் அர்ச்சனா படநாயக், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் மதுமதி,தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ்,கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், கிட்டாம் பாளையம் ஊராட்சி தலைவர் விஎம்சி. சந்திரசேகர், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ்,கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன்,தொழிற்பேட்டையின் செயலாட்சியர் சுகந்தி, தொழிற்பேட்டையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய தொழிற்பேட்டையால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Somanur ,Mo. ,Anparasan ,Arinjar Anna Industrial Estate ,Kittampalayam ,Karumathambatti ,Coimbatore district ,
× RELATED முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு...