×

வண்ணங்களும் எண்ணங்களும்

இவ்வுலகம் பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. இந்த வண்ணங்களையும் பஞ்ச பூதங்களோடு இணைத்து பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும். நெருப்பு என்ற ஒளி கலந்த வண்ணம், நீருடன் கலந்த வண்ணம், காற்றுடன் கலந்த வண்ணம், நிலத்துடன் கலந்த வண்ணம், ஆகாயத் துடன் கலந்த வண்ணம் என்று வண்ணத்தை இணைக்கலாம். அவ்வாறு இணையும் போது, அதற்கான செயல்பாடுகளும் இயங்கத் தொடங்கும் என்பதே இயற்கையின் நியதி. இயற்கையாக வாழ்வதே வெற்றியின் அடிப்படைத் தத்துவம்.

கும்பம்: காலபுருஷனுக்கு கும்பம் என்பது பதினொராம் இடமாக (11ம்) வருகிறது. கும்பம் என்பது கலசமாக கொள்ளலாம். அந்த ராசியின் வண்ணம் கருநீலமாகும். இந்த ராசிக்கு லக்னம் (1ம்) அதிபதியும் பன்னிரெண்டாம் அதிபதியும் (12ம்) ஒன்றாக அமைந்த இணைந்த ராசி. நீலம் இவர்களுக்கு நல்ல தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆனால், சனி பாவகிரகங்கள் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நீலம் நல்வளத்தையும் பெரும் கூட்டத்தையும் இவர்களுக்கு தரும். இவர்களை சுற்றி எப்படியும் ஒரு கூட்டம் இருக்கும். காரணம் சனியின் மூலத் திரிகோண வீடாக உள்ளதால், சனி நேர்மறை ஆற்றலுடன் இருந்தால், நல்ல கூட்டத்தை தங்களுக்கு சொந்தமாக்கி வைத்திருப்பர்.

கும்பத்திற்கு இரண்டாம் (2ம்) பாவதிபதியாகவும் பதினொராம் பாவதிபதியாகவும் (11ம்) வியாழன் வருவதால், மஞ்சள் வண்ணம் நன்மை செய்யும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். ஆனால், உங்கள் சுயஜாதகத்தில் வியாழன் எங்கு அமர்கிறானோ, அதை பொருத்துதான் மஞ்சளை பயன்படுத்த வேண்டு மா? பயன்படுத்த வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முடியும். சாதகமான ஸ்தானங்களில் அமர்ந்திருந்தால், மஞ்சள் நிறம் உங்களுக்கு நன்மை செய்யும். கும்பத்திற்கு மூன்றாம் வீடாகவும் (3ம்) மேஷமும் பத்தாம் வீடாக (10ம்) விருச்சிகமும் வருகிறது. இரண்டுமே செவ்வாய் அதிபதியாக வரும் வீடுகளாகும். ஆகவே, செவ்வாய் உங்களுக்கு சகோதர ஸ்தானமாகவும், தொழில் ஸ்தானமாகவும் வருவதால், சிவப்பு வண்ணம் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பகை கிரகங்களோடு இருந்தால், அந்த உறவுகளோடு யுத்தம் உண்டு. அதற்கான தகுந்த பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

பிறப்பு ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் நிச்சயம் நற்பலன்கள் உண்டு. கும்பத்திற்கு நான்காம் வீடாகவும் (4ம்) ஒன்பதாம் வீடாகவும் (9ம்) ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் வருவதால், சுக்கிரன் நல்ல நிலையில் நல்ல ராசி பாவத்தில் அமர்ந்திருந்தால், தாய் மற்றும் தாரத்தின் வழியே நற்பலன்கள் உண்டு. இருவரும் ஒரே கிரகத்தின் பாவ காரகமாகவும் கிரக காரகமாகவும் இருப்பதால், இருவருக்குள் யுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு.
உங்களின் ராசிக்கு பிங்க் என்ற இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு நன்மை செய்யும்.

கும்பத்திற்கு, ஐந்தாம் வீடாகவும் (5ம்) எட்டாம் வீடாகவும் (8ம்) மிதுனம் மற்றும் கன்னி வீடாகவும் உள்ளது. இதன் அதிபதியாக புதன் கிரகம் வருகிறது. ஆகவே, கோட்சாரத்தில் புதன் கன்னி ராசியை நெருங்கும் காலகட்டங்களில் பச்சை நிறத்தை தவிர்ப்பது நன்மை தரும். கும்பத்திற்கு, ஆறாம் வீடாக (6ம்) கடகம் வருவதால், தாயுடன் சில மனக் கசப்புகளுடன் இருப்பார். ஏனெனில், சந்திரன் கடகத்திலிருந்து எட்டாம் (8ம்) பாவத்தில் அமர்ந்திருப்பதால். சில மனக்கசப்புகளை சுமந்து வாழ வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். வெண்மை நிறங்களை பொதுவாக தவிர்த்தல் நலம் பயக்கும். இவர்களுக்கு சந்திராஷ்டமம் மிகுந்த சிரமத்தை கொடுக்கும். கும்பத்திற்கு ஏழாம் அதிபதியாக சிம்மம் (7ம்) அதன் அதிபதி சூரியனாக இருப்பதால், ஆரஞ்சு வண்ணம் நற்பலன்களை தரும்.

காலபுருஷனின் வெற்றி ஸ்தானமாக கும்பம் வருகிறது. இந்த இடத்திற்கு சனி பகவான் முப்பது வருடங்களுக்கு ஒரு முறை வருவதால், இங்கு சனி பகவான் வந்து சென்ற பின் தொழிலிலும் சமூகத்திலும் மக்கள் மனதிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும். நினைக்காத மாற்றங்கள் எங்கும் உண்டாக்கும்.வண்ணமயமான உலகில் வண்ணம் மாயத்தை செய்யும் என்ற நம்பிக்கையிலிருந்துதான் வண்ணத்திற்கான மாற்றங்கள் தொடங்குகிறது. வண்ணங்கள் நல் எண்ணங்களை விதைகட்டும். வெற்றி இனிதாகட்டும்.

The post வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க எது முக்கியம்?