கிருஷ்ணகிரி, பிப்.12: பர்கூரில் நடந்த மாரியம்மன் கோயில் விழாவினையொட்டி, 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு, உறவினர்களுக்கு கறி விருந்து வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தை அமாவாசை முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோயில் விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 9ம் தேதி, மாரியம்மன் கோயில் விழா விநாயகருக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, காமாட்சி அம்மனுக்கும், மாலை திரவுபதி அம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து பூஜை செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், கோயில் மற்றும் வீடுகளில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி 500க்கும் மேற்பட்ட ஆடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு கறி விருந்தளித்தனர். விழாவையொட்டி, பர்கூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அத்துடன் பர்கூர் நகரை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
The post 500 ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.