தில்லைநகர், பிப்.9: திருச்சி உறையூர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் ஒரு வீட்டில் குடிநீர் மின்மோட்டாரை வைத்து எடுப்பது தெரிந்ததால் மின்மோட்டாரை பறிமுதல் செய்தனர். திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் சரியாக வருவதில்லை என்று குடியிருப்போர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அதிகாலை சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக குடிநீர் குழாயுடன் மின்மோட்டார் இணைத்து குடிநீரை எடுத்தது தெரியவந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மின் மோட்டாரை பறிமுதல் செய்து மேலும் அவர்களுக்கு இதுபோன்று செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் கூறுகையில், இதுபோன்று பல வீடுகளில் குடிநீர் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது மிகப்பெரிய குற்ற செயலாகும்.
இதனால் மற்றவர்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்க முடியாத சூழல் ஏற்படும். ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வீட்டின் உரிமையாளருக்கு அபராத தொகையும், மின் மோட்டாரையும் பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
The post உறையூர் பகுதியில் வீட்டு இணைப்பில் குடிநீர் எடுக்க பயன்படுத்திய மின் மோட்டார் பறிமுதல் appeared first on Dinakaran.