×

தியாகரத்தினம் என்னும் குருதிமணி

ஆங்கிலத்தில் “பிளட் ஸ்டோன்’’ (bloodstone) என்று அழைக்கப்படும் “ஹீலியோ ட்ராப்’’ (Heliotrope) என்ற ரத்தினம், “தியாகரத்தினம்’’ என்றும், “குருதி மணி’’ என்று தமிழில் அழைக்கப்படுகின்றது. சிவந்த நிறத்தில் காணப்படும் இந்த செம்மணி, தன் நிறம் காரணமாக ரத்தத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றது.

செவ்வாய்க்குரிய ரத்தினம்

பிளட் ஸ்டோன் சிவப்பு நிறம் என்பதால், செவ்வாய்க்கு உரியதாகும். குருதி மணி, செவ்வாய் ஆட்சியாக விளங்கும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்குரிய ரத்தினமாகக் கருதப்படுகின்றது. செவ்வாய்க்குரிய துணிவு, வெற்றி, திறமை ஆகியவற்றைப் பலப்படுத்தும் ரத்தினமாக குருதி மணி விளங்குகின்றது. பவளம் அல்லது கார்னீலியன் வாங்க இயலாதவர்கள், குருதி மணியை வாங்கி அணியலாம்.

குருதி மணியின் இயல்பு

இதில், சிவப்பும் பசுமையும் கலந்த ஒரு நிறம் காணப்படும். இவ்விரண்டும் அதிகமாக கலக்கும் போது, ஆழ்ந்த பிரவுன் நிறம் கிடைக்கும். இது உறைந்து காய்ந்த ரத்தத்தை போலத் தோன்றும். எனவே இதனை பிளட் ஸ்டோன் என்றனர். இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய குருதி மணி, பசுமையும் நீலமும் கலந்ததாக இருந்தது.

மார்ச் மாதக் கல்

குருதிமணி, மார்ச் மாதத்திற்குரிய ரத்தினமாகவும் கருதப்படுகின்றது. பொதுவாக, மார்ச் மாதத்திற்கு உரியது “தற்காய்ஸ் ப்ளூ’’ அல்லது “அக்வா மரைன்’’ என்றாலும்கூட அவற்றிற்கு அடுத்த நிலையில் பச்சையும் சிவப்பும் கலந்த குருதிமணி விளங்குகின்றது. மார்ச் மாதம் பிறந்தவர்கள், திறந்த நிலையில் மேனியில் படும் வகையில் இக்கல்லை தங்க நகையில் பதித்து அணியலாம்.

குருதிமணியின் பலன்கள்

குருதிமணி தீய சக்தியை விரட்டும் தன்மையுடையது. ரத்தக்காட்டேரி, பேய், பிசாசு, பில்லி, சூனியங்ளை அண்டவிடாது. குருதிமணியை அணிந்தவர்களுக்கு மனக் கவலை என்பதே இருக்காது. எப்போதும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, ரத்தம் சூடாகவே இருப்பார்கள். துடிப்பும் துள்ளலுமாக இருப்பர்.

அறிவும் செயலும்

துரித முடிவு எடுக்க குருதிமணி உதவும். இதை அணிந்தவர் எதையும் போட்டு மனதில் குழப்பிக் கொண்டே இருக்க மாட்டார். லாஜிக்காக சிந்தித்து வேகமாக செயல்பட வேண்டிய தொழிலில் இருப்பவர்களுக்கு, குருதிமணி ஆபத்பாண்டவனாக, அனாதரட்சகனாக உதவும். இம்மணியை அணிந்தவர்கள், பகுத்தறிவுடன் செயல்படுவார்கள். எதையும் கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள். நன்கு ஆராய்ந்து நன்மை தீமைகளை அலசிப்பார்த்து செயலில் ஈடுபடுவர்.

போர் வீரர்கள் தாயத்து

பாபிலோனியப் போர் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் குருதிமணியை தாயத்தில் பதித்து வைத்து அணிந்தனர்.

ரத்தம் தொடர்பான நோய் தீரபெண்கள், தங்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் தீர, குருதிமணியை அணியலாம். இம்மணி, உஷ்ணமான மணி என்பதால் உடம்பில் ரத்தம் சூடாக இருக்கும், வேகமாக பாயும். வயதுக்கு வராதவர்கள் குருதிமணி அணிவதால், நல்ல பலனுண்டு. ரத்தப் புற்று நோய் உடையவர், ரத்தக் கொதிப்பு உடையவர், ரத்தம் உறையாமல் இருக்கும் வியாதி கொண்டவர் குருதிமணி அணியலாம்.

குருதிமணியின் இயல்பு

குருதிமணி, குண்டலினி இயல்புடையது. இதுவே ஆறு சக்கரத்துக்கு வேர்ச் சக்கரமாகும். உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி, மேலே ஏற்ற வல்லது குருதிமணி. சோம்பலாக இருப்பவர், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பவர், இதனை அணிவதால், சுறுசுறுப்பாக மாறுவார். குருதிமணியை அதிக நேரம் வெயிலில் சூரிய ஒளியில் வைத்திருந்தால், அதன் நிறம் மங்கும், கீறல் விழுந்து பின்பு உடைந்து போகும். இதற்கு வெயிலும் வெப்பமும் ஆகாது. ஏற்கனவே குருதிமணி சூடானமணி என்பதால், வெயில் படும்போது வெடித்துவிடும்.

எங்குக் கழுவ வேண்டும்?

குருதிமணியை ஓடுகின்ற தண்ணீரில் கழுவ வேண்டுமே தவிர, கிடைக்கும்நீரில் கழுவக்கூடாது. கிண்ணத்தில் தண்ணீர் / பால் வைத்துக் கழுவக் கூடாது. அருவியில் கழுவுவது நல்ல பலனைத் தரும். குழாயைத் திறந்துவிட்டுக் கழுவலாம். இந்த குழாய், பாத்ரூம் அல்லது சமையலறை சிங்க் குழாயாக இருக்கக் கூடாது.

கோயிலுக்குச் சென்ற பலன் தரும்

பிரபஞ்சத்தில் இருக்கும் மின்காந்த சக்தியைக் கொடிமரத்தின் வழியாக நமக்குக் கொண்டுவந்து கோயிலுக்குள் தருவதால்தான் நாம் கோயில் பிரகாரங்களைச் சுற்றி வருகின்றோம். அந்த மின்காந்த சக்தியை ஈர்த்து நேரடியாக நமக்குள் கொண்டு வந்து தரக்கூடிய ஆற்றல் படைத்தது குருதிமணி. கோயிலுக்குப் போக இயலாதவர்கள், நடக்க முடியாதவர்கள், தூரம் தொலைவு பயணிக்க முடியாதவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள், சுரங்கப் பணி, விண்வெளிப் பயணம் போன்றவற்றில் இருப்பவர்கள், குருதிமணியை அணிந்திருப்பதால் கோயிலுக்குப் போன சக்தி கிடைக்கும்.

யாருக்கு அதிக பலன் தரும்?

தீயணைப்பு படையினர், காவல் துறையினர், ராணுவ வீரர், பாதுகாப்பு வீரர்கள் குருதிமணி அணிவதால் ஆபத்து காலங்களில் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறமையை பெறுவர். விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் தொழில் அதிபர்கள், தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் பதவியில் இருக்கும் மேலாளர்கள், சிக்கலான நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றிருக்கும் நிர்வாகிகள், கதை, கேமராமேன், நடிகர்கள் போன்றவர்களை ஒருங்கிணைத்து படத்தின் வெற்றிக்குக் கேப்டன் போல் செயற்படும் திரைப்பட இயக்குனர்கள், தினந்தோறும் அரசியல் பிரச்னைகளைச் சந்தித்து மறுப்பு அல்லது ஆதரவு அறிக்கையை வழங்க வேண்டிய கட்சித்தலைவர்கள், தினமும் குரூப் டான்ஸ் ஆடுவோர், ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்போர், பாடிபில்டர், பாக்ஸர், மல்யுத்த வீரர்கள் என இவர்கள் குருதிமணி அணியலாம்.

எப்போது? எப்படி?

குருதிமணி, உடம்பில் படும்படி அணிய வேண்டும். வலது கை மோதிர விரலில் அணிவது நல்லது. விரலில் அணிவதைவிட சங்கிலி, பதக்கம் என்று கழுத்து அணியாக அணிவது மிகவும் நல்லது. வலது கையில், தங்கக் காப்பில் ரத்தினத்தைப் பதித்து அணியலாம்.

செவ்வாயும் குருதிமணியும்

குருதிமணி அணிகின்றவர், நல்ல செயல்பாடும், வீரமும், விவேகமும், சக்தியும் படைத்தவராக விளங்குவர். ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம், வக்ரம் அல்லது ராகு – கேதுவுடன் சேர்ந்து இருந்தால், அவர்கள் ஜோதிடரின் ஆலோசனைப்படி குருதிமணியை அணியலாம். செவ்வாய் புத்தி திசை நடப்பவர்கள், அவை சாதகமாக இல்லாத சூழ்நிலையில் குருதி மணி அணிவதால், சில நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்கும். தீய பலன்கள் குறையும்.

தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்

The post தியாகரத்தினம் என்னும் குருதிமணி appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்