ஐதராபாத்: இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் நாளே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 64.3ஓவருக்கு 246ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவருக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்து 119ரன் எடுத்திருந்தது. இந்தியா 127ரன் பின்தங்கிய நிலையில் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது. களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 76, சுப்மன் கில் 14 ரன்னுடன் விளையாட ஆரம்பித்தனர். வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட் முதல் ஓவரை வீசினார். அதன் 2வது பந்தில் பவுண்டரி விளாசிய ஜெய்ஸ்வால் 4வது பந்தில் ரூட்டிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவர் 80ரன் விளாசி இருந்தார். அடுத்த சில ஓவர்களில் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே பந்து வீச்சில் 23ரன்னில் ஆட்டமிழந்தார் சுப்மன். அடுத்து 35ரன்னில் வெளியேறினார் ஸ்ரேயாஸ்.
இடையில் பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசிய ராகுல் 86ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த ஜடேஜாவும் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த கர் பரத் 41ரன்னில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் ஒரு ரன் எடுத்தார். அதன்பிறகு அரைசதம் வெளுத்த ஜடேஜா உடன் இணைந்தார் அக்சர். இருவரும் பொறுப்புடன் விளையாட 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7விக்கெட் இழப்புக்கு 110ஓவரில் 421ரன் குவித்தது. அதனால் இந்தியா 175ரன் முன்னிலைப் பெற்றது. ரூட், ஹார்ட்லே தலா 2விக்கெட் எடுத்தனர். இந்நிலையில் 3வது நாளான இன்று களத்தில் உள்ள ஜடேஜா 81, அக்சர் 35ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.
The post ரன் குவித்த இந்தியா: ராகுல், ஜடேஜா ஆட்டத்தால் appeared first on Dinakaran.