×

இந்திய- வங்க தேச எல்லையை கண்காணிக்க மெரைன் படை பிரிவு அமைக்க பிஎஸ்எப் திட்டம்

கொல்கத்தா: இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்,ஊடுருவலை தடுக்க 1,100 வீரர்கள் அடங்கிய மெரைன் பட்டாலியன் உருவாக்க எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த பகுதியான சுந்தரவனம் என்பது 100 க்கும் மேற்பட்ட தீவுகள் அடங்கிய பகுதி. வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகளின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. 9,630 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்த சுந்தரவன காடுகளில் ஏராளமான நீரோடைகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் ஓடுகின்றன.

காட்டின் பெரும்பாலான பகுதிகள் மேற்கு வங்கத்தில் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றின் ஒரு பகுதி வங்கதேசத்திற்குள் அமைந்து இருக்கிறது. இரு நாடுகளின் எல்லையில் காடுகள், ஆறுகள், நீரோடைகள் இருப்பதால், கடத்தல் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், சுந்தரவன பகுதியில் மெரைன் பட்டாலியன் உருவாக்குவதற்கு பிஎஸ்எப் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரி கூறுகையில்,‘‘சுந்தரவன காடுகள் பாதுகாப்பு ரீதியில் முக்கியமான பகுதியாகும்.

வங்க தேசத்தில் இருந்து சுந்தரவன காடு வழியாக கடத்தல், ஊடுருவல் ஆகியவை நடைபெற வாய்ப்பு உள்ளன. எனவே, அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, 1,100 வீரர்கள் கொண்ட மெரைன் படை அமைக்கப்படும். மேலும்,பாதுகாப்புக்கு 40 டிரோன்கள், காடுகள், நீரோடைகளை கண்காணிக்க 14 நவீன ரோந்து வாகனங்கள் வாங்கப்படும். இதற்கான திட்டம் பிஎஸ்எப்பின் கிழக்கு பிராந்திய தலைமையகம் தயாரித்துள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மெரைன் படை பிரிவு செயல்பட தொடங்கும்’’ என்றார்.

* 2 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம்,கோவிந்த்பூர் சர்வதேச எல்லை பகுதியில் வங்க தேச கடத்தல்காரர்கள் 2 பேரை பிஎஸ்எப் நேற்று சுட்டு கொன்றது. வங்கதேச எல்லையில் இருந்து கடத்தல் கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தது. எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பிஎஸ்எப் வீரர்களை ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதையடுத்து பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று பிஎஸ்எப் டிஜஜி எஸ்.எஸ்.குலேரியா நேற்று தெரிவித்தார்.

The post இந்திய- வங்க தேச எல்லையை கண்காணிக்க மெரைன் படை பிரிவு அமைக்க பிஎஸ்எப் திட்டம் appeared first on Dinakaran.

Tags : BSF ,India-Bangladesh ,Kolkata ,Border Security Force ,Indo-Bangladesh ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...