×

ஏன் எதற்கு எப்படி?: ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன?

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

? திருமணப் பொருத்தத்தில் ரஜ்ஜுப் பொருத்தம் மிகவும் அவசியம் என்கிறார்கள். ரஜ்ஜுப் பொருத்தம் என்றால் என்ன?
– ஹர்ஷிதா, பெங்களூர்.

ஜென்ம நட்சத்திரத்தினை அடிப்படையாகக்கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்கின்ற முறையில் இந்த ரஜ்ஜுப் பொருத்தம் என்பது இடம்பிடிக்கிறது. இதனை மாங்கல்ய பொருத்தம் அல்லது கழுத்துப் பொருத்தம் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பொருத்தம் இல்லை என்றால் மாங்கல்ய பலம் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது. அதனால், இதற்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். உண்மையில் பழங்காலத்திய நூல்களில் இதுபோல பத்துப் பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம் பார்க்கின்ற விதிமுறைகள் எங்கும் காணப்படவில்லை. இது கடந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு முறையாக இருக்க வேண்டும்.

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளையும் அடியேன் நன்றாக அறிவேன். உண்மையில், மனப் பொருத்தம் என்பது நல்லபடியாக இருந்தாலே, திருமணத்தை நடத்தலாம். மனப் பொருத்தம் என்பதையே ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்புதான் தீர்மானிக்கும். ஆக, வெறுமனே நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்காமல் ஜாதக அமைப்பினைக் கொண்டு திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பதுதான் நல்லது.

? கோபூஜை தொடர்ந்து செய்து வரலாமா..? எந்தெந்த நாட்களில் செய்வது நல்லது?
– கார்த்திக்ராஜா, வத்தலகுண்டு.

கோபூஜையை தொடர்ந்து செய்து வரலாம். எல்லா நாட்களிலும் கோபூஜை செய்வது நல்லதுதானே.. புகழ்பெற்ற ஆலயங்களில் தினசரி கோபூஜை நடப்பதை காணமுடியும். நம்மால் எப்பொழுதெல்லாம் செய்ய முடியுமோ அந்த நாட்களில் எந்தவிதமான தயக்கமுமின்றி தாராளமாகச் செய்யலாம். இதற்கென்று தனியாக நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வெள்ளிக் கிழமை நாள் என்பது மகாலட்சுமிக்கு விசேஷமான நாள் என்பதால், குறைந்த பட்சமாக அந்த நாளிலாவது கோபூஜை செய்து வணங்குங்கள் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். அதற்காக வெள்ளிக் கிழமையில் மட்டும்தான் கோபூஜை செய்ய வேண்டும் என்பதில்லை. எல்லா நாட்களிலும் கோபூஜை செய்து வழிபடலாம்.

? ஹோரைகள் என்பது என்ன?
– சுந்தரம், மேட்டுப்பாளையம்.

ஹோரை என்றால் ஒரு மணி நேரம் என்கிற காலஅளவினைக் குறிக்கும் சொல் ஆகும். `ஹோரா’ என்ற வார்த்தையைத்தான் ஆங்கிலத்தில் ஹவர் என்று அழைக்கிறோம். ஒரு நாளின் சூரிய உதய காலம் தொடங்கி, முதல் ஒரு மணி நேரம் ஆனது எந்த கிரஹத்தின் ஆளுமைக்குள் வருகிறதோ, அதுவே அந்த நாளின் கிழமையாகக் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு காலையில் சூரிய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் சூரியனின் ஆதிக்கத்தில் இருந்தால் அது ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கப் படுகிறது. சந்திரனின் ஆதிக்கத்தில் இருந்தால் அது திங்கட்கிழமை என்று அழைக்கப்படுகிறது.

இப்படித்தான் நிஜக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று அந்தந்த நாட்களுக்குரிய கிழமைகள் கிரஹங்களின் பெயர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோரையின் வரிசையானது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் அமைந்துள்ளது. இப்படி ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரமும் இருபத்து நான்கு ஹோரைகளாக மேற்கண்ட வரிசையில் இடம்பிடிக்கிறது.

ஞாயிற்றுக் கிழமை முடியும் நேரத்தில் புதன் ஹோரை இருக்கும். மறுநாள் சூரிய உதயகாலத்தில் சரியாக சந்திரன் ஹோரை துவங்குவதால் அந்த நாள் ஆனது சந்திரனின் பெயரால் திங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹோரைகளுக்கான பலன்களும் தனித்தனியாக உள்ளன.

? எனது வீட்டின் மீது கோயிலின் நிழல் படுகின்றது. ஏதேனும் தீமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
ராமசந்திரபிரபு, திருத்துறைப்பூண்டி.

கோயிலின் நிழலா? கோபுரத்தின் நிழலா? என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். கோயிலின் நிழல் வீட்டின் மீது விழுவதற்கான வாய்ப்பு இல்லை. கோபுரத்தின் நிழல் விழுவதற்கான வாய்ப்புண்டு. நமக்கு ஏதேனும் துன்பம் என்பது வரும்போது நாம் அனைவரும் இறைவனின் நிழலில் ஒதுங்கத்தானே விரும்புவோம். அப்படி யிருக்க இறைசாந்நித்தியம் நிறைந்த ஒரு பகுதியின் நிழல் வீட்டின் மீது பட்டால் நிச்சயமாக தீமைகள் ஏற்படாது.

ஆனால், இந்த கருத்திற்குள் ஒளிந்திருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசர்கள் காலத்தில் ஆலயம் அமைப்பதற்கான இடத்தினைத் தனியாக தேர்வு செய்திருப்பார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் அந்த ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், மடைப்பள்ளி ஊழியர்கள், நந்தவனப் பராமரிப்பாளர்கள் என ஆலயத்தின் சிப்பந்திகள் குடியிருப்பதற்கான பகுதியினை ஏற்படுத்தியிருப்பார்கள்.

பெரும்பாலும், அந்த இடமானது குறிப்பிட்ட அந்த ஆலயத்திற்குச் சொந்தமான பகுதியாகத்தான் இருக்கும். அவர்கள் குடியிருக்கும் வீடுகளின் மீது நிழல் விழுந்தால் அதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. அதே நேரத்தில் ஆலயத்திற்குச் சொந்தமான அந்த இடங்களை ஆக்கிரமித்து ஆலயப் பணிகளுக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் அந்த இடத்தில் குடியிருக்கும்போது பாதிப்பு என்பது வந்து சேரும். சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள் அல்லவா. ஆலயத்திற்குச் சொந்தமான இடமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வீட்டின் மீது கோபுரத்தின் நிழல் விழுவதால் தீமைகள் என்பது உண்டாகாது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன்,ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : Rajju ,Thirukovilur ,Hariprasad Sharma ,Rajjub ,Dinakaran ,
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது