சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நோய் பரவாமல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 300 மருத்துவ குழுக்கள் (நடமாடும் மருத்துவ குழு மற்றும் ஆர்பிஎஸ்கே குழு) அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை மாநகராட்சிக்கு 159 குழுக்கள் , செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60 குழுக்கள் , திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளுக்கு 51 குழுக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 30 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால், புயல் பாதித்த பகுதிகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க துணை சுகாதாரத்துறை இயக்குநர்கள் மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்கள், வெக்டார் கட்டுப்பாடு, குளோரினேஷன் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இந்த குழுக்கள் மூலம் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை தினசரி அறிக்கையாக பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இயக்குநர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவ குழுக்கள்: பொது சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
