×

ஏன் எதற்கு எப்படி?: வாஸ்துப்படி ஒரு ப்ளாட்டின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்?

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

செவ்வக வடிவில் இருக்க வேண்டும். நீளம் மற்றும் அகலம் இரட்டைப் படை எண்ணாக இருப்பது அவசியம். உதாரணத்திற்கு, ஒரு கிரவுண்ட் எனப்படும் 2400 சதுர அடியில், ஒரு ப்ளாட் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், நீளம் 60 அடியாகவும், அகலம் 40 அடியாகவும் இருப்பது உத்தமம்.
– சிவகுமார், திருநெல்வேலி.

? ஒரு வீட்டை முன்பதிவு செய்வதற்கு உகந்த நாட்கள் எவை?
– சுரேஷ் சந்திரா, வல்லம்.

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து, அக்ரிமெண்ட் போடுவதற்கும் அல்லது பத்திரப்பதிவு செய்வதற்கும் பொதுவாக புதன்கிழமை என்பது மிகவும் நன்மையைத் தரும். வீட்டை வாங்குபவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருத்தமாக உள்ள நாட்கள், வளர்பிறை நாட்கள், தேய்பிறையாக இருந்தால் நேத்ரம், ஜீவன் உள்ள நாட்கள், பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை நாட்கள் நன்மையைத் தரும். கீழ்நோக்கு நாள் மற்றும் கரிநாள் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

?தற்போதுள்ள சூழலில் அட்டாச்டு குளியல் – கழிப்பறைகள்தான் அமைத்துத் தருகிறார்கள், அப்படி இருப்பது சரிதானா?
– ஸ்ரீனிவாசன், தாம்பரம்.

நிச்சயமாக சரியில்லை. முதலில் சாஸ்திரத்தின்படி வீட்டிற்குள் குளியல் மற்றும் கழிப்பறைகள் இருக்கக் கூடாது. இவை இரண்டுமே கொல்லைப் புறம் என்று அழைக்கப்படும் தோட்டத்தில்தான் அமைக்க வேண்டும். பெருநகரங்கள் மற்றும் அபார்ட்மெண்ட்களில் வீட்டிற்குள்ளேயே குளியல் மற்றும் கழிப்பறைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அவற்றை அறைகளோடு இணைக்காமல் தனியாக அமைப்பது நல்லது. இதுபோக, இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்காமல் தனித்தனியேதான் அமைக்க வேண்டும். கழிப்பறை மற்றும் குளியலறை இரண்டுமே எதிர் எதிர் வினைகளைப் புரிபவை.

கழிப்பறை என்பதை, என்னதான் நாம் சுத்தமாக வைத்திருந்தாலும் அங்கே கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். குளியல் அறை என்பது நம் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்குகின்ற இடமாக இருப்பதோடு, நோய்த் தொற்று கிருமிகள் எதுவும் நம்மை அண்டாது பாதுகாக்கின்ற பகுதியாகவும் இருக்கிறது. வெளியில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கச் செல்கிறோமே ஏன்? அழுக்குகளும் வியர்வையில் வந்து ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளும் நம்மை விட்டு அகல வேண்டும் என்பதற்காகத்தானே.

அப்படியிருக்க கிருமிகள் வாசம் செய்துகொண்டிருக்கும் கழிப்பறையை குளியல் அறையோடு இணைத்து வைப்பது என்பது நிச்சயமாக ஆரோக்யத்தைத் தராது. இடப்பற்றாக்குறையின் காரணமாக வேறு வழியின்றி அட்டாச்டு குளியல் – கழிப்பறைகளை அமைப்பவர்கள் குறைந்த பட்சமாக இவை இரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு வைத்திருக்க வேண்டும். அத்துடன் குளியலறைப் பகுதிக்கும் கழிப்பறைப் பகுதிக்கும் ஒன்றரை அடி உயர வித்தியாசம் இருப்பதும் ஓரளவிற்கு நன்மையைத் தரும்.

? ஒரு நபரின் பிறந்த தேதி, சொத்து வாங்குவதை பாதிக்கிறதா?
– ஸ்ருதி சுதர்சனம், மடிப்பாக்கம்.

நிச்சயமாக பாதிக்காது. பிறந்த தேதியைக் கொண்டு சொத்து வாங்க முடியுமா.. முடியாதா.. என்பதை தீர்மானிக்க இயலாது. எந்த தேதியில் பிறந்திருந்தாலும், அவரால் சொத்து வாங்க முடியும். அவரது ஜனன ஜாதக அமைப்புதான் இதனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் லக்ன பாவம், நான்காம் பாவம் மற்றும் ஒன்பதாம் பாவம் இவற்றின் பலம்தான் சொத்து வாங்கும் யோகத்தினைத் தரும். ஒரு சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் இருந்தாலும், அவர்களால் அதனை அனுபவிக்க இயலாமல் போகும். சொந்த வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு இவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பார்கள். இதனையும் அவர்களது ஜாதக பலம்தான் தீர்மானிக்கும். பிறந்த தேதி என்பது சொத்து வாங்குவதை நிச்சயமாக பாதிக்காது.

?வீட்டில் உள்ள பூஜை அறை எந்த திசை நோக்கி இருப்பது நல்லது?
– பாக்கிய லட்சுமி, பரமக்குடி.

இறைவன் எல்லா திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறானே.. பொதுவாக தெற்குதிசை என்பது முன்னோர்களுக்கானது என்று நம்மவர்கள் நினைப்பதால் அந்த திசையை நோக்கி பூஜை அறையை அமைப்பதில்லை. கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியவாறு பூஜை அறையை அமைக்கும் வழக்கம் பெரும்பாலும் நடைமுறையில் இருந்து வருகிறது. பூஜை அறைக்குள் தட்சிணாமூர்த்தி அல்லது குருமார்களின் படங்களை தெற்கு திசையை நோக்கி மாட்டி வைப்பதில் தவறேதுமில்லை. நம் முன்னோர்களின் படங்களை எக்காலத்திலும் பூஜை அறையில் மாட்டி வைக்கக் கூடாது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன்,ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி?: வாஸ்துப்படி ஒரு ப்ளாட்டின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,K.B. Hariprasad Sharma ,
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது