சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக ஒன்றிய அரசு அறிவித்து தமிழக அரசு கோரிய ரூ.5060 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய செயற்குழு உறுப்பினர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பங்ேகற்றார்.
துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரபீக் அஹமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம், பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 7ம் தேதி மதுரையில் நடைபெறும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை திட்டமிட்டபடி வெற்றிபெறச் செய்வது, மாநாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டன.
மேலும், இக்கூட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த சென்னை பெருமழை வெள்ள பேரிடரை விட தற்போது அதிகமான பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஒன்றிய அரசு இதனை தேசியப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு முதற்கட்டமாக கோரிய ரூ.5060 கோடி நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும்.
நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் தற்போதைய தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்கிற நம்பிக்கை இல்லை. இந்த சூழலில் தமிழக அரசு அவர்களின் விடுதலைக்கான மாற்று ஏற்பாடுகளை நோக்கி தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு விரைவில் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post சென்னை மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்து தமிழக அரசு கோரிய ரூ.5060 கோடியை விரைவாக வழங்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. செயற்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.
