×

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் வெள்ள பாதிப்பு இடங்களில் மீட்பு பணி தீவிரம்: எம்எல்ஏக்கள் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல் கனமழையால் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் குடியிருப்பு வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதுடன், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அரசு ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிடிஓ காலனி, பாரதிநகர், குட்வில் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த பொதுமக்களுக்கு தேவையான பால், பிஸ்கட், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை லாரிகள் மூலம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். அதேபோல பல்லாவரம் தொகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கியதோடு, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகளை அதிகாரிகள் மூலம் துரிதப்படுத்தினார். தாம்பரம் மாநகராட்சி சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு படகுகள் மூலம் சென்று தேவையான அத்தியாவசிய பொருட்களை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் வழங்கினார்.

மேலும் மழைநீரில் சிக்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி வாலிபரையும் பத்திரமாக மீட்டு மீட்பு குழுவினர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார். மீட்பு பணிகளுக்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை படகு மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி இருந்த நிலையில், அதனை மழைநீரால் பாதிப்புகள் ஏற்பட்ட தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் நேரில் சென்று வழங்கினார். தொடர்ந்து தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள், மீட்பு பணிகள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, ஜெயபிரதீப் சந்திரன் ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் உணவுபொருள் விநியோகம்
தாம்பரம் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா டிராக்டர் மூலம் நேரடியாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்ட கன்னடபாளையம், சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சும் நகர், சிடிஓ காலனி, குட்வில் நகர், அம்பேத் நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் வீடுகளில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பால், குடிநீர், பிஸ்கட், பால் பவுடர், கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

அதேபோல, தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், ஜிஎஸ்டி சாலையில் உள்ள அம்மா உணவகம் மூலம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என சுமார் 9000 பேருக்கும், 4வது மண்டலம், சண்முகம் சாலையில் உள்ள அம்மா உணவகம் மூலம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை, மதியம், இரவு என சுமார் 9500 பேருக்கும், கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள அம்மா உணவகம் மூலம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என சுமார் 6500 பேருக்கும் மற்றும் அனைத்து அம்மா உணவகத்திலும் பொதுமக்களுக்கு இலவசமாக மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதேபோல பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

The post தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் வெள்ள பாதிப்பு இடங்களில் மீட்பு பணி தீவிரம்: எம்எல்ஏக்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram, Pallavaram ,Tambaram ,Pallavaram ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில்...