×

திருமங்கலம் அருகே பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை: குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்


திருமங்கலம்: திருமங்கலம் அருகே, பீர்பாட்டிலால் அடித்து வாலிபரை கொலை செய்தது தொடர்பாக, அவரது நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சபட்டி துணைக்கோள் நகரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, தனியார் கல்லூரி பின்புறம் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் அறை அருகே, முட்புதரில் ரத்தக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், ‘இறந்து கிடந்தது மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த மீராகனி மகன் இஸ்மாயில் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் கீரத்துரை வசந்த் (20), தெற்குவாசல் சக்தி (25), மாடக்குளம் விக்னேஷ் (20), அவனியாபுரம் திருமூர்த்தி (21) ஆகியோருடன் தனது மகன் சென்றதாக தெரிவித்தனர்.இதையடுத்து 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், ‘நேற்றுமுன் தினம் இரவு இஸ்மாயில், வசந்த் உட்பட 5 பேரும் சேர்ந்து துணைக்கோள் நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

குடி போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் நண்பர்கள் பீர் பாட்டிலால் இஸ்மாயிலை தாக்கியுள்ளனர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இஸ்மாயில் மயங்கி விழுந்ததாக 4 பேரும் நினைத்து இரவு முழுவதும் அவரது அருகிலேயே தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 4 பேரும் எழுந்து இஸ்மாயிலை எழுப்பிய போதுதான், அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை இழுத்து புதரில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், இது குறித்து சக்தி தனது நண்பர் மூலம் ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சென்று உடலை மீட்டு 4 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குடி போதை தகராறில் வாலிபர் பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமங்கலம் அருகே பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை: குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Tirumangalam ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...