×

பதினெட்டின் பெருமை வேறு எதற்கும் இல்லை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண்களின் ரகசியங்கள்

சென்ற இதழில் எண் 15 முதல் 17 வரையிலான முக்கியத்துவம் குறித்துப் பார்த்தோம். அதற்கடுத்த எண் 18. 18-ன் முக்கியத்துவம் பார்ப்பதற்கு முன் 17 என்ற எண்ணில் இன்னும் ஒரு சிறப்பையும் பார்த்துவிடுவோம். சீர்காழிக்குப் பக்கத்திலே திருவெண்காடு என்ற ஒரு திருத்தலம் இருக்கிறது, சுவேதாரண்யம் என்று பெயர். நவகிரகங்களில் இந்தத் தலம் புதனுக்கு உரியது. இங்குள்ள அம்மனுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர்.

பக்கத்திலேயே புதனுக்கு தனி சந்நதி உண்டு. இங்கே புதனுக்கு பரிகாரம் சொல்லப் படுகின்றது. 17 மூலிகைகளால் ஆன எண்ணெய் ஊற்றி,

17 விளக்குகளை ஏற்ற வேண்டும். புதனுடைய பிரகாரத்தை 17 முறை சுற்ற வேண்டும் என்று எல்லாவற்றையும் 17, என்று பரிகாரத்தைச் சொல்கிறார்கள். காரணம் என்ன என்று சொன்னால், புதனுடைய தசா ஆண்டுகள் 17. சரி.. எண் 18 – டை பார்ப்போம்.

புராணங்கள் 18

இனி எண் 18-க்குள் நுழைவோம். நமது சமய மரபில் பெரும்பாலான முக்கியமான விஷயங்கள் பதினெட்டாகவே இருப்பதைப் பார்த்து வியப்படைகிறோம். நமது உடல் 18 விஷயங்களை உள்ளடக்கியது. 5 கர்ம இந்திரியங்கள், 5 ஞான இந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், சத்வ, ரஜஸ், தாமஸ் எனும் மூன்று குணங்கள், ஒரு ஜீவன் ஆக மொத்தம் 18. ஈஷா – உபநிஷத்தில் 18 மந்திரங்கள்: ஆதித்ய ஹிருதய ஸ்லோகத்தில் 18 ஸ்லோகங்கள் உள்ளன. வேத வியாசர் 4 வேதங்களை தொகுத்துக் கொடுத்ததோடு புராணங்களையும் தொகுத்தார். அப்படி அவர் கொடுத்த புராணங்களின்
எண்ணிக்கை 18.

பிரம்ம புராணம், பத்ம புராணம், விட்ணு புராணம், சிவ புராணம், பாகவத புராணம், நாரத புராணம், மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராக புராணம், கந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம், கருட புராணம், பிரம்மாண்ட புராணம் இது தவிர, 18 உபபுராணங்கள் மற்றும் 18 தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்) உள்ளன.

பகவத் கீதை

மஹாபாரதம் ஐந்தாம் வேதம். மகாபாரத காவியம் 18 பர்வங்கள்:- 1) ஆதி பர்வம், 2) சபா பர்வம், 3) வன பர்வம், 4) விரத பர்வம், 5) உத்யோக பர்வம், 6) பீஷ்ம பர்வம், 7) துரோண பர்வம், 8) கர்ண பர்வம், 9) ஷல்ய பர்வம், 10) சௌப்திக பர்வம், 11) ஸ்திரீ பர்வம், 12) சாந்தி பர்வம், 13) அனுஷாசன பர்வம், 14) அஸ்வமேதிகா பர்வம், 15) ஆஷ்ரமவாசிகா பர்வம், 16) மௌசல பர்வம், 17) மஹாபிரஸ்தானிகா பர்வம், 18) ஸ்வர்கரோஹண பர்வம்.

அதில் முக்கியமான பகுதி பகவத் கீதை. பகவத் கீதை உலகப் பிரசித்தி பெற்றது. கண்ணனால் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு யோகம் என்று பெயர். (அத்தியாயம் 1 முதல் 6 வரை) ஒருவர் தனது கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறது மற்றும் கர்ம யோகம் என்று அழைக்கப்படுகிறது.

அத்தியாயம் 7 முதல் 12 வரையிலான 6 அத்தியாயங்களின் இரண்டாவது தொகுப்பு பக்தி யோகா என்று அழைக்கப்படுகிறது. அத்தியாயம் 13 முதல் 18 வரையிலான 6 அத்தியாயங்களின் மூன்றாவது தொகுப்பு, ஞான யோகம் எனப்படும்.

இனி பகவத் கீதையின் அத்யாயம் வாரியான விவரங்கள்:

முதல் அத்தியாயம்: அர்ஜுனனின் துக்கம். (அர்ஜுன விஷாத யோகம்)
இரண்டாவது அத்தியாயம்: அறிவின் வழி (சாங்கிய யோகம்)
மூன்றாவது அத்தியாயம்: செயல் வழி (கர்ம யோகம்)
நான்காவது அத்தியாயம்: அறிவில் செயலைத் துறக்கும் வழி (ஞான யோகம்)
ஐந்தாவது அத்தியாயம்: துறவின் வழி (கர்ம சன்யாச யோகம்)
ஆறாவது அத்தியாயம்: தியானத்தின் வழி (தியான யோகம்)
ஏழாவது அத்தியாயம்: உணர்தல் கொண்ட அறிவின் வழி (விஜ்ஞான யோகம்)
எட்டாவது அத்தியாயம்: அழியாத பிரம்மத்திற்கான வழி (அக்ஷர பரப்ரஹ் மனேனமஹா யோகம்)
ஒன்பதாவது அத்தியாயம்: அரச அறிவின் வழி மற்றும் அரச ரகசியம் (ராஜ வித்யா – ராஜ குஹ்ய யோகம்)
பத்தாவது அத்தியாயம்: தெய்வீக மகிமையின் காட்சிகள் (விபூதி யோகம்)
பதினோராவது அத்தியாயம்: பிரபஞ்ச வடிவத்தின் பார்வை (விஸ்வரூப சந்தர்சன யோகம்)
பன்னிரண்டாம் அத்தியாயம்: பக்தி வழி
பதின்மூன்றாவது அத்தியாயம்: க்ஷேத்ரா மற்றும் க்ஷேத்ரஜ்ன விபாகயோகத்தின் பாகுபாடு
பதினான்காவது அத்தியாயம்: மூன்று குணங்களின் பாகுபாடு (குணத்ரய விபாக யோகம்)
பதினைந்தாம் அத்தியாயம்: பரம ஆவிக்கான வழி (புருஷோத்தம பிராப்தி யோகம்)
பதினாறாம் அத்தியாயம்: தெய்வீக மற்றும் தெய்வீகமற்ற பண்புகளின் வகைப்பாடு (தெய்வ – அசுர சம்பத் விபாக யோகம்)
பதினேழாவது அத்தியாயம்: மும்மடங்கு ஷ்ரத்தை பற்றிய விசாரணை (ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்)
பதினெட்டாம் அத்தியாயம்: துறப்பதில் விடுதலையின் வழி (மோட்ச சன்யாச யோகம்)

மகாபாரதப் போர்

மகாபாரதப் போர் மொத்தம் 18 நாள்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு முக்கியமான விஷயங்கள் நடைபெற்றன. இந்த மகாபாரத யுத்தத்தில் கௌரவர்கள் பக்கமும் பாண்டவர்கள் பக்கமும் சேர்ந்து கலந்து கொண்ட சேனைகளின் அளவு 18 அக்ரோணி. கௌரவர்கள் சார்பாக பதினோரு அக்ரோணி சேனையும், பாண்டவர்கள் சார்பாக ஏழு அக்ரோணி சேனையும் மகாபாரத யுத்தத்தில் கலந்து கொண்டனர்.

அக்குரோணி அல்லது அக்சௌகிணி என்பது, பழங்காலத்து போர் அணி வகுப்பு வகைகளுள் ஒன்று. இது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது. இந்த எண்கள் ஒவ்வொன்றிலுமுள்ள இலக்கங்களைக் கூட்டும் போது 18 என்னும் எண் கிடைக்கும். (எகா:21870ல்,2+1+8+7+0=18). அத்துடன், இதில் தேர், யானை, குதிரை, படைவீரர் 1:1:3:5 என்னும் விகிதத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இறுதியாக, போரில் 18 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீராமானுஜரும் பதினெட்டும்

வைணவ ஆச்சார்யரான ஸ்ரீராமானுஜர் தமது ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகசிய மந்திர அர்த்தத்தைப் பெறுவதற்காக திருவரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை 18 முறை நடந்தார் என்பது வரலாறு. 18-ஆம் முறைதான் அவருக்கு அர்த்தம் கிடைத்தது. அதை பின் அவர் ஆசையுள்ளோருக்கெல்லாம் கூறினார்.

உடையவர், எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யக்காரர் என்று பல திருநாமங்கள், ராமானுஜருக்கு உண்டு. அதில் ஒரு முக்கியமான திருநாமம், “திருப்பாவை’’ என்பது. அவருக்கு இந்தப் பெயர் வருவதற்கு காரணம், அவர் திருப்பாவையின் மீதும், ஆண்டாளின் மீதும் கொண்டிருந்த ஈடுபாடு மட்டுமல்ல, திருப்பாவையின் 18 ஆம் பாட்டும் ஒரு காரணம்.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

அவர் தினமும் பிட்சைக்குச் செல்வது வழக்கம். அப்போது திருப்பாவை பாடிக் கொண்டே செல்வார். அப்பொழுது பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் கதவை திறந்து கொண்டு வந்தார். திருப்பாவையில், “செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்’’ என்ற வரியை மனம் உருகி ராமானுஜர் பாடிய பொழுது வளைக்கரங்களோடு பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் வந்து கதவை திறந்தவுடன் அந்த நப்பின்னை வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்த எம்பெருமானார் மூர்ச்சை அடைந்தார்.

தன் வீட்டு வாசலிலே மூர்ச்சை அடைந்ததைப் பார்த்தவுடன் அத்துழாய் பதறிப்போய் தன்னுடைய அப்பாவிடம் சொன்னதும் அவர் நிலைமையை ஊகித்துக் கொண்டு ராமானுஜர் மிகமிக உருக்கமாக திருப்பாவை 18-ஆம் பாசுரத்தை பாராயணம் செய்து கொண்டு வந்திருப்பார்; அதிலே செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் என்கிற வரி வந்தவுடன் நீ கதவை திறந்தாய் அல்லவா, சாட்சாத் நப்பின்னை தான் என்று நினைத்துக் கொண்டு மூர்ச்சை அடைந்திருப்பார். அவ்வளவு ஈடுபாடு அவருக்கு என்றார்.

அந்த ஈடுபாட்டின் காரணமாக அவர் திருப்பாவை ஜீயர் என்று வழங்கப்பட்டார். (சில நூல்களில் இந்த நிகழ்வு, திருக்கோட்டியூரில், நடந்ததாகவும், திருக்கோட்டியூர் நம்பியின் மகள் தேவகிப் பிராட்டி கதவைத் திறந்தாகவும் உள்ளது)

18 ரகசியங்கள்

வைணவத் தத்துவங்களை விளக்கும் நூல்களுக்கு ரகசிய நூல்கள் என்று பெயர். பிள்ளை லோகாசார்யர் என்கின்ற மகத்தான ஆசிரியர் 18 ரகசிய நூல்களை அருளிச் செய்திருக்கிறார். அந்த நூல்களுக்கு அஷ்ட தசா ரகசியங்கள் என்று பெயர். 1) முமுக்ஷூப்படி, 2) தத்துவத்திரயம், 3) அர்த்தபஞ்சகம், 4) ஸ்ரீவசனபூஷணம், 5) அர்ச்சிராதி, 6) பிரமேயசேகரம், 7) பிரபந்நபரித்ராணம், 8) சாரசங்கிரகம், 9) சம்சார சாம்ராஜ்யம், 10) நவரத்ன மாலை, 11) நவவிதசம்பந்தம், 12) யாத்ருச்சிகப்படி, 13) பரந்தபடி, 14)  ஸ்ரீய:பதிப்படி, 15) தத்துவ சேகரம், 16) தனித்வயம், 17) தனிச்சரமம், 18) தனிப்பிரணவம்.

ஐயப்பனும் 18ம்

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. எல்லோரும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்குச் செல்வார்கள். அங்கே சந்நிதானத்தில் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று சொன்னால் சில படிகளை ஏற வேண்டும். மொத்தம்

18 படிகளை ஏற வேண்டும்.

சபரிமலை கோயிலை சுற்றி 18 மலைகள் உள்ளன:- 1) காலகெட்டிமலை, 2) இஞ்சி பரக்கோட்டை, 3) புதுச்சேரிக்காணம், 4) கரிமலை, 5) நீலிமலை, 6) கவுண்டர்மலை, 7) பொன்னம்பலமேடு, 8) சித்தம்பலமேடு, 9) மயிலாடும்மேடு, 10) ஆறமலை, 11) நிலக்கல்மேடு, 12) தேவர்மலை, 13) ஸ்ரீபாதமாலா, 14) காட்கிமாலா, 15) மாதங்கமாலா, 16) சுந்தரமலை, 17) நாகமலை, 18) சபரிமலை.

மதுரை பக்கத்தில் அழகர் கோயிலுக்கு ஒரு காவல் தெய்வம் உண்டு அந்த தெய்வத்திற்கு 18-ஆம் படி கருப்பன் என்று பெயர். ஆடி மாத பௌர்ணமி நாளில் அழகர் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் வழிபடுவர். பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருந்து வருகிறார்.

ராகுவும் 18ம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு தசா காலம் உண்டு. அந்த கிரகத்தின் பலாபலன்களைப் பொறுத்துத் தான் அந்த ஜாதகருக்கு, அந்தந்த காலங்களில் நன்மையோ தீமையோ நடக்கும். ஒரு ஜாதகருக்கு அந்தந்த காலங்களில் நடக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் அந்த குறிப்பிட்ட கிரகம்தான் தலைமை தாங்கும். அந்த ஜாதக விதிப்படி 18 என்பது ராகு கிரகத்திற்குரியது. ராகுவினுடைய தசா காலம் 18 ஆண்டுகள்.

The post பதினெட்டின் பெருமை வேறு எதற்கும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...