×

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு; உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2016-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்க கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை கடந்த முறை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்திருந்தது. இருதரப்பிலும் விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து இறுதியாக விசாரிக்கப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்பட்டது.

விசாரணை தொடங்கிய உடனே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை அனிருதா போஸ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த மனு வேறு நீதிபதியிடம் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது உங்கள் முன் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை நீங்கள் விசாரிக்க கூடாது. மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், நீதிபதி பேலா எம்.திரிவேதி அமர்வு முன் விசாரணை நடைபெற்றால் என்ன தவறு என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

கடந்த முறை கூடுதல் விசாரணை இல்லாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என நீதிபதி பேலா எம். திரிவேதி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த தங்களது கோரிக்கைகளை தலைமை நீதிபதி முன்பு வைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு; உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Highway department ,Edappadi Palaniswami ,Supreme Court ,Delhi ,chief minister ,Highway ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...