*முதல்வருக்கு நன்றி தெரிவித்து பழங்குடியின பட்டதாரிகள் உறுதி
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக கருதி அனைவருக்குமான வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார். அந்த வகையில் பழங்குடியினா் மக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி வாழ்வு மேம்பட தொடா்ந்து அரசால் அவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் 2022-2023ம் ஆண்டில் மணலோடை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட துவக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் மற்றும் பூதக்கால், சின்ன இலுப்பூர் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட துவக்கப் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதி ரூ.16,65,000 மதிப்பிலும், 2022-2023 மற்றும் 2023-2024ம் ஆண்டுகளில் ரூ1,09,500 மதிப்பில் 30 பழங்குடியின பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
2022-2023ம் ஆண்டில் பச்சைமலையிலுள்ள மருதை மாவுடையார் ஓடையில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. 2022-2023ம்ஆண்டில் பச்சைமலையில் உள்ள 24 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு புதிய சமையலறை கட்டும் பணி ரூ.2.51 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. 2023-2024ம் ஆண்டில் நரிக்குறவர் இன மக்கள் வாழும் பழங்கனாங்குடி ஊராட்சி, பூலாங்குடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மற்றும் சிமெண்ட் ரோடு அமைக்க ரூ.43.50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து பழங்குடியின பட்டதாரி மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறும் வகையில் அவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டதன் போில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பழங்குடியின பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற பழங்குடியின பட்டதாரிகள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்து கொண்டனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்செவல்பாடி கிராமத்தை சோ்ந்தவன் கவிதாஸ்,என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி ஆவேன். தற்பொழுது தனியார் நிறுவனத்தில் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அரசின் சாா்பில் மிகச்சிறப்பாக பழங்குயினா் பட்டதாரிகளுக்கு இப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். நிச்சயமாக முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சி வாயிலாக நான் சிறந்த நிலைக்கு உயா்வேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இம்முகாமை நடத்திட உத்தரவிட்டு செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தொிவித்து கொள்கிறேன்.
கன்னியாகுமாரி மாவட்டம், பேச்சிப்பாறை கிராமத்தை சோ்ந்த ஆஷா கூறுகையில்,எனக்கு தாய், தந்தை கிடையாது. வறிய சூழ்நிலையில் அரசின் உதவியால் நான் எம்.ஏ.பி.எட்., படித்துள்ளேன். சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது கணவா் தனியார் நிறுவனத்தில் குறைவான ஊதியத்தில் பணி புரிகிறார். எவ்வாறு அரசு பணிக்கு செல்வது என்று தயக்கம் இருந்தது. அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாம் எங்களை போன்ற பழங்குடியினா் பட்டதாரிகளுக்கு வரப்பிரசாதம் ஆகும்.
மாவட்ட அளவில் அரசால் அளிக்கப்படும் இலவச போட்டித்தோ்வு பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கும், போட்டித்தோ்வில் எவ்வாறு வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் அளிக்கப்பட்ட பயிற்சி நானும் போட்டித் தோ்வில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நல்ல முயற்சிக்கு உத்தரவிட்டு செயல்படுத்திய முதலமைச்சருக்கு எனது நன்றியை தொிவித்து கொள்கிறேன்.செங்கல்பட்டு மாவட்டம், மானாம்பதியைச் சோ்ந்தவன் முருகன் கூறியதாவது:
நான் பி.இ பொறியியல் பட்டதாரி ஆவேன். எனது தாய், தந்தை கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தனா். நான் தனியார் நிறுவனத்தில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகிறேன். அரசு வேலைக்குச் சென்று எனது தாய் தந்தையருக்கு உதவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் எந்த விதத்தில் போட்டித் தோ்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது என்ற தயக்கம் இருந்தது. பழங்குடியினா் நலத்துறை எங்கள் மீது அக்கறை கொண்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்களாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் செல்கின்றோம். எங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் முதலமைச்சருக்கு எனது நன்றியினை தொிவித்து கொள்கிறேன் என்றார்.
The post வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி முகாம் வாயிலாக நாங்கள் சிறந்த நிலைக்கு உயர்வோம் appeared first on Dinakaran.
