சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நடிகை திரிஷா குறித்து கண்ணியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் பேசியிருந்தார். அந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா, எம்.பி.கனிமொழி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சினிமா தயாரிப்பாளர் சங்கமும் தனது கண்டனத்தை மன்சூர் அலிகானுக்கு தெரிவித்தனர்.
இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், நடிகை திரிஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனை சட்டம் 354(எ), 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
அதைதொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானிடம் நடிகை திரிஷா குறித்து அவதூறு பேசியது குறித்து நேரில் அழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர். அதற்காக, போலீசார் சட்டப்படி நடிகர் மன்சூர் அலிகானுக்கு 41ஏ எனப்படும் சம்மனை நேற்று வழங்கினர். அப்போது இன்று காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
The post நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு; நடிகர் மன்சூர் அலிகான் இன்று ஆஜராக வேண்டும்: அனைத்து மகளிர் போலீசார் சம்மன் appeared first on Dinakaran.
