×

2 நாளில் பொதுத் தேர்வு அட்டவணை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: அரசுப் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் 2 நாளில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் தினவிழா நேற்று நடந்தது. அந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.

விழாவுக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் நடப்பதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அதற்கு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம்.

அரசு சார்பில் நீட், ஜெஇஇ, போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற 46,216 மாணவ-மாணவியரும், ஜெஇஇ பயிற்சிக்கு 29,279 மாணவ-மாணவியரும், இரண்டு பயிற்சிகளும் பெற 31,730 பேர் என மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பொதுத் தேர்வுகள் குறித்து அட்டவணை 2 நாளில் வெளியிடப்படும். பொதுத் தேர்வுகள் நடக்கும்போது வேறு போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் குறுக்கிடாத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 வகை அட்டவணை தயாரித்துவைத்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

The post 2 நாளில் பொதுத் தேர்வு அட்டவணை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Minister of School Education ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...