×

மகத்துவமிக்க பிரதோஷம்

யோகியர்கள் தமது யோக சாதனையால் மனத்தினை அடக்கி உடலில் உள்ள ஆறாதாரங்களைக் கடந்து உச்சியில் உள்ள சகஸ்ரதள தாமரையில் வீற்றிருக்கும் இறைவனை தரிசித்து அங்குப் பெருகும் பேரானந்த வெள்ளமாகிய அமுதத்தை உண்டு இறவாநிலை பெற்றுள்ளனர். இவ்விருவரும் பெற்றுண்டது முறையே சித்தாமிர்தமும், ஞானாமிர்தமும் ஆகும். இவை அவர்களுக்கு மட்டுமே பயன் தருவதாகும்.

இதனை உட்கொண்டு அவர்கள் இறைவனைப் போன்றே ஐந்தொழில் புரியும் வல்லமை பெற்றவர்களாக கரையற்ற இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கின்றார்கள். அவர்கள் கொண்டுள்ள மானுட தேகம் பல விக்கிரியா சக்திகளை உடையதாக, பல கோடி ஆண்டுகளுக்கு இளமை நலம் மாறாததாக இருந்து வருகின்றது.

இதுபோன்றே அமரர்களாகிய தேவர்கள், அசுரர்களால் அடிக்கடி உதைபட்டு அடிபட்டு மரணமடையாது இருக்கவும், ஆயுதங்களால் தாக்கப்பட்டு உடல் சிதையாதிருக்கவும், உடலில் வலிகள் தோன்றாதிருக்கவும், வைரம் போன்ற உறுதியான தேகம் பெறவும், அனந்த சுகங்களையும் இடையறாது அனுபவிக்கவும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்று உண்டனர்.

இவர்கள் உட்கொண்ட அமிர்தம் இந்த ஊழிக்காலம் வரையே பயன்தரத் தக்கதாகும். ஊழிமுடிவில் இவர்கள் யாவரும் அழிந்து சிவபெருமானுள்ளேயே ஒடுங்குவர். ஆனால், சித்தர்களும், ஞானிகளும் உண்ட அமிர்தம் எல்லையற்ற காலம் அழியாததாகும். முற்பிறப்பில் செய்ததான, தருமங்களின் பயனால்உயர்நிலை எய்தி, முப்பத்து முக்கோடி தேவர்களாக நிலை பெற்றுள்ள அமரர்கள் உண்டது தேவாமிர்தமாகும்.

பாற்கடல் கடைந்த கதை

நீண்ட காலத்திற்கு முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இரண்டு புறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். பலர் நோயுற்றனர். எனவே, தேவர்கள் பரமனை அடைந்துஅசுரர்களுடன் நீண்ட நாள் தொடர்ந்து போரிடுவதற்கான வலிமையும், அழியாத உடலும், இறவாத உயிரும், பெறவேண்டி, அதற்கு என்ன வழி என்று கேட்டனர். அவர் அவர்களைத் திருப்பாற்கடலில் துயிலும் நாராயணனிடம் அழைத்துச் சென்றார்.

நாராயணன் தேவர்களை நோக்கி தேவர்களே! பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும். அதனை நீங்கள் உண்டால் இறவாத நிலையையும், அளவற்ற வலிமையையும் பெறலாம். ஆனால், பாற்கடலைக் கடைவதென்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தனியே சென்று அதனைக் கடைந்து விடவும் முடியாது. எனவே, அசுரர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அசரர்களை இதற்காகத் துணைக்கு அழைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்பதால், தேவர்கள் முதலில் தயங்கினர் என்றாலும் பின்னர் வேறுவழி இல்லாததால் பாற்கடலைக்கடைய அசுரர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டனர். பின்னர், அனைவரும் கூடி மந்திர மலையை மத்தாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். ஆனால் அதனைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு பாதி வழிவரை வருவதற்குள்ளேயே அவர்கள் சோர்ந்து விழுந்து விட்டனர்.

பின்னர், நாராயணன் கருடனை ஏவி அந்த மலையைக் கொண்டு சென்று பாற்கடலில் சேர்த்தார். இப்போது, மலையாகிய மத்து கிடைத்து விட்டது. கடைவதற்குக் கயிறு வேண்டுமல்லவா? அனைவரும் கூடி அஷ்டமா நாகங்களில் ஒருவனும் பாம்புகளின் அரசனுமான வாசுகியைத் தங்கள் வேலைக்குக் கயிறாக இருக்கும்படி வேண்டினர்.

பின்னர், ஒரு நல்ல வேளையில் சூரியனை (சில நூல்களில் சந்திரன் என்று குறிக்கப்பட்டுள்ளது) தறியாகவும், மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய முற்பட்டனர். அப்போது தேவர்கள் வாசுகியின் தலைப் பக்கம் நின்றனர். அசுரர்கள், தேவர்களை நோக்கி, நாங்கள் வேதம் பயின்று மேன்மை பெற்றவர்கள் இப்பாம்பின் வாலைப் பிடிப்பது எங்களுக்குக் கேவலம்.

அதனால் நாங்கள் தலைப்பகுதியில் நிற்கின்றோம் என்றனர். அதன்படியே அவர்கள் தலைப்பகுதியிலும் தேவர்கள் வால்பகுதிகளிலும் பிடித்துக் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால், மத்தாகிய மந்திரமலை சற்றும் அசைவதாக இல்லை. மேலும் அது கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அப்போது திருமால் ஆமை அவதாரம் எடுத்து அதைத் தாங்கிப்பிடித்தார்.

அதன் பிறகு இருசாரரும் கூடிக் கடலை கடையத் தொடங்கினர். இவ்வாறு இவர்கள் பாற்கடலைக் கடையத் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகள் ஆயின. இவர்கள் முதலில் சிவபெருமானைத் துதிக்காமலும் அவருடைய அனுமதி இன்றியும் பாற்கடலைக் கடையத் தொடங்கியதால் அவர்களுக்கு உரிய பயன் கிடைக்கவில்லை. மேலும், இரண்டு பக்கத்தினரும் மாறிமாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அத்துன்பத்தால் அவனது கண்கள் சிவந்தன. அவன் தன்னையும் அறியாமல், வலி பொறுக்க மாட்டாமல் தன் ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கினான்.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்தும் ஒருவகை விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட காளம் என்கிற நீல விஷமும், பாற்கடலில் பறந்த ஆலம் என்கிற கறுப்பு விஷமும் சேர்ந்து கறுப்புப் புயல்போல கொடிய வெப்பமும், கறும்புகையும் கொண்டதாக இடமும் வலமுமாக மாறிமாறி உலகமெங்கும் சூழ்ந்தது. அதற்கு அஞ்சிய தேவர்கள் தறிகெட்டு இடமும் வலமுமாக ஓடினர்.

பாம்பின் தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் விஷத்தின் வெப்பத்தால் எரிந்து சாம்பலாகிவிட்டனர். எஞ்சியவர்களுடைய உடல்கள் தீயில் வெந்து கருப்பாகவும், சிவப்பாகவும், கோரமாகவும், அழகற்றதாகவும் மாறிவிட்டன. பொங்கி வரும் விஷத்தைக் கண்டு பிரம்மன் ஓடி ஒளிந்து விட்டான். பிரகாசமான முத்தைப் போன்று ஒளி வீசும் வெண்ணிறம் கொண்ட திருமால் இந்த விஷத்தை நான் எளிதில் அடக்குவேன் என்று முன் வந்து நின்றார்.

உடனேயே, அவர் உடல் கறுத்து மயங்கி வீழ்ந்தார். அன்று முதல் அவர் கறுப்பு உடல் கொண்டவரானார். அதன் பின்னர், அவர் ஒருவாறு தேறி அனைவரையும் அழைத்துக் கொண்டு கயிலாய மலையை அடைந்தனர். அங்கு திருவாயிலில் வீற்றிருக்கும் நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உட்சென்று சிவபெருமானை வணங்கி, பொங்கி வரும் விஷவேகத்திலிருந்து தம்மைக் காப்பாற்ற வேண்டுமென்று முறையிட்டு அழுது தொழுதனர். அப்போது அவர் பார்வதியை நோக்கி, ‘‘என்ன செய்யலாம்’’ என்று கேட்க, பார்வதி தேவியும் தேவர்களைக் காத்து அருள்புரியுமாறு வேண்டினாள்.

அப்போது சிவபெருமான் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமாகிய சுந்தரர் அப்போது சிவபெருமான் எனும் தமது அணுக்கத் தொண்டரை அனுப்பி, அவ்விஷத்தைத் திரட்டிப் பற்றிக்கொண்டு வருமாறு கூறினார். சுந்தரரும் வெளியே சென்று, உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் கொடிய ஆலகாய விஷத்தைப் பற்றித் திரட்டி ஒரு கருநாவற் பழம்போல ஆக்கி அதனை அடக்கிச் சிறிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வந்து பெருமானிடம் அளித்தார். அப்போது தேவர்கள், ‘‘ஐயனே எங்கும் வியாபித்து எங்களைத் துன்புறுத்திய இந்த விஷம் உங்கள் கையில் கட்டுண்டு கிடக்கின்றது.

ஆதலின் இதை வெளியே விடாது தாங்களே தங்களுடைய திருமேனியில் அடக்கியருள வேண்டும்’’ என்று கூறினர். சிவபெருமான் ஒரு கணநேரம் விஷாபஹக்ரண மூர்த்தி என்னும் ரௌத்திர வடிவம் தாங்கி, அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அந்த விஷத்தை, ‘‘பெருமான் உட்கொண்டால் சகல புவனமும் அழியுமே’’ என்று பார்வதிதேவி அவ்விஷம் உட்செல்லவொட்டாமல் அவருடைய கழுத்திலேயே தங்கும்படி செய்தாள்.

அப்போது தேவர்கள் அவருடைய அச்சமூட்டும் வடிவைக்கண்டு அஞ்சி, ‘‘பெருமானே! எங்களையும் சகல புவனங்களையும் நீங்கள் காத்தருளியதன் அடையாளமாக தங்கள் கண்டத்திலேயே அந்த விஷம் விளங்கட்டும்’’ என்று வேண்டினர். பின்னர் அவர் மீண்டும் இயல்பான வடிவம் பெற்றார். சிவபெருமானும் அதற்கு இசைந்து அந்த விஷத்தை ஒரு நீலமணியைப்போல தமது கழுத்தில் நிறுத்தினார். பின்னர், ஒரு திருவிளையாடல் புரியக் கருதி மயக்கம் கொண்டவர் போலப்படுத்துக் கொண்டார்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post மகத்துவமிக்க பிரதோஷம் appeared first on Dinakaran.

Tags : Pradosha ,Pradhosham ,
× RELATED பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா