×

பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

*501 கிலோ ஸ்வீட்ஸ் அழிப்பு-45 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அதிகளவில் நிறமிகள் சேர்க்கப்பட்ட 501 கிலோ ஸ்வீட்ஸ் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தவிர, 45 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கமிஷனரின் உத்தரவின்படியும், கோவை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு கள ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 104 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 8 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 501.3 கிலோ அதிகளவு வண்ண நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். மேலும், அளவுக்கு அதிகமாக வண்ண நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களிலிருந்து 7 உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 45 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி உணவு பொருட்களை பார்சல் செய்த 7 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. காவல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதமாக ரூ.80 ஆயிரம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்த ஒரு கடைக்கு குறைகளை நிவர்த்தி செய்யவும், மறு களஆய்வுக்கு பின் உற்பத்தியை தொடங்க வேண்டும் எனவும் அதுவரை உற்பத்தியை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற திடீர் களஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் எனவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும், உணவு தரம் குறித்த புகார்களுக்கு 94440-42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் மற்றும் Tn Food Safety Consumer App மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Diwali festival ,department ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...