கோவை: உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கோவை வஉசி உயிரியல் பூங்காவில் இருந்த விலங்குகள், பறவைகள் வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கோவை வஉசி உயிரியல் பூங்கா 1965ம் ஆண்டு 4.35 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்டது. இந்த பூங்கா தற்போது மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன உள்பட சுமார் 400க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இருந்தன. இந்த பூங்காவிற்கு ஒன்றிய வன உயிரின மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உரிமம் வழங்கப்பட்டு இருந்தது.
பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு ஏற்ப கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய வன உயிரின மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியது. இதில், ஏற்பட்ட காலதாமதம் காரணமாக போதிய இடவசதி இல்லை என கூறி ஒன்றிய வன உயிரின மேம்பாட்டு ஆணையம் கடந்த 2022ம் ஆண்டு கோவை வஉசி உயிரியல் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வருகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், உயிரியல் பூங்காவில் இருந்த விலங்குகள், பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் தற்போது 23 முதலைகள், ரோஸி வெள்ளை பெலிக்கன் 13, ரேட் ஸ்நேக் 8, கண்ணாடி விரியன் 5, இந்தியன் மலைப்பாம்பு 11, இந்தியன் நாகப்பாம்பு 10, நட்சத்திர ஆமை 3, கடமான் 25, புள்ளிமான் 26, குரங்கு 31, ஆசிய மரநாய் 3, கிளி இனங்கள் 96, கொக்கு இனங்கள் 89, கழுகு இனங்கள் 27 மற்றும் ஒரு இருவாச்சி பறவை ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக நேற்று பாம்புகள், கழுகுகள், இருவாச்சி பறவை, மரநாய், கிளிகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகிய 133 விலங்குகள், பறவைகள் வண்டலூர், வேலூர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவில் மற்ற விலங்குகள், பறவைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன..
The post உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கோவை உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூருக்கு மாற்றப்பட்ட விலங்குகள் appeared first on Dinakaran.
