×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி குறைவு: படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதிக்கு வரும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இவற்றை தடுக்க, கிராமங்களுக்கு அதிகளவில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களான பிலாப்பூர், மெய்யூர், கொளத்தாஞ்சேரி, கொங்கனாச்சேரி, பி.வி.களத்தூர், வள்ளிபுரம், உத்திரமேரூர், தச்சூர், படாளம் உள்பட பல்வேறு உள்கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகர நிலையில் சென்று வரும் அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் உள்புற கிராமப் பகுதிகளுக்கு குறைவான எண்ணிக்கை அரசு பேருந்துகள்கூட இயக்கப்படுவதில்லை. இதனால் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் அலைந்து திரியவேண்டிய அவலநிலை நீடிக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அரசு பேருந்துகள் வராமல் நின்று போவதால், பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் ஏற்றி சென்று வருகின்றனர். இதனால் அவர்களின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பலர் அரசு பேருந்து நின்று போகும்போது, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீண்ட தூரமுள்ள தங்களின் கிராமங்களுக்கு நடந்து செல்கின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் விசாரித்தால், கிராமப் பகுதிகளில் பெரும்பாலான மாணவர்கள் இலவச பயண அட்டை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் வருவாய் குறைவதாலும், அங்குள்ள சாலைகள் மேடுபள்ளமாக இருப்பதால் அரசு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்கின்றனர்.

இதுபோன்ற அரசு பேருந்துகள் முறையான அறிவிப்பின்றி நிறுத்தப்படுவதை கண்டித்தும், குறிப்பிட்ட நேரத்துக்கு அரசு பேருந்து இயக்கப்படாததை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் அடிக்கடி சாலைமறியலில் ஈடுபடுகின்றனர். அப்பிரச்னைக்கு அதிகாரிகள் தற்காலிக தீர்வு மட்டுமே காண முயற்சிக்கின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் லாபநோக்கமின்றி கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி குறைவு: படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...