×

ராஜஸ்தானை போலவே ம.பியிலும் ஈடி ரெய்டு நடத்தும்: திக்விஜய் சிங் கணிப்பு

போபால்: மத்தியபிரதேசத்திலும் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தும் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சி செய்யும் மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 25ம் தேதியும் ஒரே கட்டமாக பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் கேள்வித்தாள் கசிவு வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா பேரவை தொகுதி வேட்பாளர் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அண்மையில் சோதனை நடத்தியது. மேலும் அந்நியா செலாவணி சட்டமீறல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனும், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவருமான வைபவ் கெலாட்டுக்கு சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் சிங் நேற்று அளித்த பேட்டியில், “தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் அமலாக்கத்துறை சோதனையை பாஜ அரசு நடத்தியது. இதேபோல் இன்னும் சில தினங்களில் மத்தியபிரதேசத்திலும் அமலாக்கத்துறை சோதனைகள் நடக்கும்” என்று தெரிவித்தார். இதனிடையே திக்விஜய் சிங் தன் ட்விட்டர் பதிவில், “மத்தியபிரசேத்தில் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் இடையேதான் போட்டி. இதில் ஏதாவது ஒரு கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதனால் சிறிய கட்சிகளின் வலையில் வாக்காளர்கள் விழ வேண்டாம். பாஜவின் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றத்தை எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர். கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

The post ராஜஸ்தானை போலவே ம.பியிலும் ஈடி ரெய்டு நடத்தும்: திக்விஜய் சிங் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : ED ,Rajasthan ,Digvijay Singh ,Bhopal ,Madhya Pradesh ,BJP ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...