அன்னூர், அக.27: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையம் பின்புறம் குடும்பத்துடன் வசித்து வருபவர் மொய்தீன். அன்னூர் மார்க்கெட் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூலுவபாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளார். பின்னர், நேற்று காலை குடும்பத்துடன் மொய்தீன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மொய்தீன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு கோவையில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி மொய்தீன் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை உறுதி செய்த போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
The post சைக்கிள் கடைக்காரர் வீட்டில் 15 பவுன், ரூ.2.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.