சென்னை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகாலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – காரைக்குடி இடையே இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இன்று இரவு 11.30மணிக்கு சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் நாளை காலை 9.30 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திற்கு சென்றடையும். மேலும், காரைக்குடி – சென்னை சென்ட்ரல் செல்ல நாளை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.
இதேபோல், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, நாளை மறுநாள் இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 8.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இதன் மறுமார்க்கத்தில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சரஸ்வதி பூஜையையொட்டி சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
