×

திருச்சி மாநகர மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி, அக்.8: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் நடந்து வரும் நீரேற்று நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுப்பணிக்கு பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தொிவித்ததாவது: திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அழுத்தத்துடன் சீரான அளவில் 24X7 என்ற வகையில் குடிநீர் வழங்கும் நோக்கத்துடனும், பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டும் 30 எம்எல்டி கூடுதலாக குடிநீர் பெறும் வகையில், ₹.52.17 கோடி மதிப்பில் பெரியார்நகர் கம்பரசம்பேட்டை நீர்சேகரிப்பு கிணறுகளை புனரமைத்தல் மற்றும் புதிதாக 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இப்பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு ஆய்வுப் பணிகள் நடந்தது. கடந்த 2009ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில், 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 3 ஆயிரத்து 163 ஊரக குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் (2036ம் ஆண்டு வரை) குடிநீர் வழங்க சுமார் ₹.616 கோடி மதிப்பில் 19.76 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 11.6.2009 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் 4 எண்ணிக்கையிலான நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றில் இருந்து தண்ணீர் 448 கி.மீ. நீளமுள்ள நீரேற்றுக் குழாய்கள் மற்றும் புவி ஈர்ப்புக் குழாய்கள் மூலம் 119 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளுக்கும், 601 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, 198 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலுள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போதைய தமிழக முதல்வர் டாக்டா் கலைஞரால் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது சாலை விரிவுபடுத்துதல் பணிகள், முறையற்ற இணைப்புகள், குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. எனவே இவற்றை உடன் சரி செய்து முறையான குடிநீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூரில் இயங்கி வரும் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தோம். இவ்வாறான ஆய்வு தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்வோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாநகராட்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் குழாய் சீரமைக்கும் பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சிகளின் போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயா் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், முசிறி எம்எல்ஏ தியாகராஜன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

The post திருச்சி மாநகர மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Trichy ,Tamil Nadu Municipal Administration ,KN Nehru ,Education ,Anbil Mahesh Poiyamozhi ,
× RELATED கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு...