×

மழை நீர் உயிர் நீர் பற்றாக்குறையை போக்க மழைநீரை சேமிப்போம்!

திருச்சி, மே 16: `நீரின்றி அமையாது உலகு’ என்று நீரின் மகத்துவத்தை உலகிற்கு சொன்னது வள்ளுவம். மனிதர்கள் மட்டுமல்ல பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட கடல் நீராக உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் மட்டுமே நன்னீராக உள்ளது. இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடி தண்ணீர் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் உலகில் கிடைக்கக்கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவு நீரால் மாசடைந்து விடுகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுப்படுத்தி வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் கடுமையான கோடை வெப்பத்தால் போதிய அளவு மழை இல்லாமல் குடிநீருக்கே நாம் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நம்மிடம் உள்ள நீரை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து வேளாண்மை ஆலோசகர் முனைவர் சிவபாலன் கூறுகையில்…
நம் நாடு உலக அளவில் 17 சத மக்கள் தொகையையும் நீர் ஆதாரத்தில் 4 சத அளவையும் கொண்டுள்ளது. 2017ம் ஆண்டு ஆய்வின்படி இந்தியாவில் ஆண்டு முழுவதும் பெய்யும் மழையளவில் 8 சதம் மட்டுமே சேமிக்கப்படுகிறது. மேலும் சீனா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் 3-5 மடங்கு அதிக அளவு நீரைக்கொண்டே தானிய உற்பத்தி நடைபெறுகிறது. பருவ மழையினை சரிவர சேமிக்காத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவு உபயோகிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறையும் பொழுது தண்ணீர் பற்றாக்குறை, வேளாண்மை சாகுபடி குறைதல், கால்நடைகளுக்கான நீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பருவம் தவறி பெய்யும் மழையினால் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை பயிர் உற்பத்தி பாதிப்பு போன்ற சூழ்நிலை உருவாகிறது. எனவே நீர் சேமிப்பை வலியுறுத்தும் வண்ணம் நாடு முழுவதும் 256 மாவட்டங்களில், 1592 தண்ணீர் பற்றாக்குறை அபாயம் உள்ள வட்டாரங்களில் அரசு துறைகள் வேளாண் அறிவியல் நிலையங்கள் தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விழிப்புணா்வு பிரசாரம், கள பயிற்சிகள், கலந்துரையாடல் பேரணிகள் கலைநிகழ்ச்சிகள் மூலமாக நீர்சேமிப்பின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. எதிர்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை தவிர்க்க கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மழைநீர் சேகரிப்பு: பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் கால்நடைகளுக்கும் நீர் பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயா்த்தவும் மழைநீர் சேமிப்பு அவசியம். குடியிருப்பு பகுதிகளில் மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு மூலமாகவும், உறிஞ்சு குழாய்கள் மூலமாகவும் மழைநீரை சேமிக்க முடியும். சேமித்த மழைநீரை வடிகட்டி காய்ச்சி குடிநீராக பயன்படுத்த முடியும்.

நீர் ஆதாரங்களை புதுப்பித்தல்: இந்தியாவின் மக்கள் தொகையில் (ஏறக்குறைய 12 சதம்) 160 மில்லியன் மக்களுக்கு சுத்தமான நீர் பயன்பாடு இல்லாத சூழ்நிலை உள்ளது. நமது நீர் ஆதாரங்களான ஊரணி, குளம், குட்டை, ஆறு, நதி போன்றவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தாலும் ஆக்கிரமிப்பு மூலமாகவும் நீர் மாசுபடுவதன் மூலமாகவும் நீர் நிலைகளில் உள்ள நீரை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே பாரம்பரிய நீர்நிலைகளை புதுப்பிக்கவும், குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி பராமரிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.

நீர்பிடிப்பு முகமைகள் அமைத்தல்: நம் நாட்டில் 85 மி. ஹெக்டா் அளவிற்கு மானாவாரி நிலங்களாக உள்ளது. நீர் தேக்க மேம்பாட்டு பணிகள் மூலம் மானாவாரி பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். நீர்பிடிப்பு முகமைகள் அமைப்பதன் மூலமும் கசிவு நீர்குட்டை, பண்ணை குட்டைகள் அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற பணிகளின் மூலம் வழிந்தோடி வரும் தண்ணீரை தேக்கவும், சேமிக்கவும் முடியும். நீர் வள மேலாண்மை மூலம் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண் வளத்தை பாதுகாக்க முடியும்.

போர்வெல்களில் சேகரிப்போம்: நமது நீர் தேவை அளவில் 40 சதம் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே உள்ளது. பயன்பாட்டில் உள்ள மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர் மட்ட சரிவை ஈடு செய்ய முடியும். நகா்புறங்களில் வீடுகளின் மேற்கூரையிலிருந்து வழிந்தோடி வரும் நீரை குழாய்கள் மூலமாக சேமிப்பு குழிகளுக்கு எடுத்து செல்லலாம். சேமிப்பு குழிகளில் அமைக்கப்பட்ட பெரிய கற்கள், ஜல்லி கற்கள் மற்றும் மணல் அடுக்குகளில் மழைநீர் வடிகட்டப்படும். சேமிப்பு குழிகளின் கீழ்பகுதியிலிருந்து ஆழ்துளை கிணறு, திறந்த கிணற்றுடன் இணைக்கும் குழாய் பொறுத்தப்பட்டு மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இதே முறையில் கிராமப்புறங்களில் தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீரை சேகரித்து வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும்.

மரம் வளர்ப்போம்:
நம் சுற்றுச்சூழலை தூய்மை ஆக்குபவை மரங்களே ஆகும். தொழிற்சாலைகள், வாகனங்களின் புகை காரணமாக ஏற்படும் மாசினை மர வளர்ப்பு மூலம் குறைக்க முடியும். மரங்கள் மண்அரிப்பை தடுக்கின்றன. நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக பெய்ய துணை புரிகின்றன. மனிதா்களுக்கு தேவையான பூ காய் கனி கீரை போன்ற உணவுகளை தருவதுடன் கட்டுமானப் பொருள் முதல் தீக்குச்சி வரை பலபொருட்களை தயாரிக்கவும் உதவுகின்றன.

மேலும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் புகலிடமாகவும் விளங்குகின்றன. எனவே ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளான மரங்களை வளா்ப்பது வனங்களை காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பது
நமது அனைவரது கடமையாகும்.

The post மழை நீர் உயிர் நீர் பற்றாக்குறையை போக்க மழைநீரை சேமிப்போம்! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Valluvam ,earth ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...